காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் தொடர் போராட்டத்துக்கு அழைப்பு!

“இறுதிப் போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்களையும், அவர்களின் பெயர் விவரங்களையும் வெளியிட வேண்டும். இலங்கை அரசுக்கு  ஐ.நா. கால நீடிப்பை வழங்கக்கூடாது ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 20ஆம் திகதி திங்கட்கிழமை முதல் கிளிநொச்சி நகரில் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படும்.”
– இவ்வாறு இறுதிப் போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
“இறுதிப் போரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் இதுவரை அரசியல்வாதிகளையும் நல்லாட்சி அரசு என்று கூறப்படும் கூட்டு அரசையும் நம்பி ஏமாந்து விட்டோம்.எமது பிள்ளைகளைக் கண்டுபிடிக்க நாம்தான் போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.
எதிர்வரும் 20ஆம் திகதி தொடர் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். அன்றைய தினம் ஒரு கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்று மறுநாள் 21ஆம் திகதி எம்மால் ஐ. நா. பொதுச் செயலாளருக்கு மனு கையளிக்கப்படும்.
நாம் சடப்பொருளையோ அசையும் அசையா சொத்தையோ கோரி நிற்கவில்லை. எமது இரத் தத்தின் இரத்தங்களைக் கோரி நிற்கின்றோம். உயிர்களைக் கோரி நிற்கின்றோம். அவர்களை மறைத்து வைத்திருக்கும் இடங்களை வெளிப் படுத்தி அவர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிடும்படி கோரி நிற்கின்றோம்.
இதற்கு இந்த அரசுக்கு ஐ.நா. அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த அரசுக்கு மீண்டும் கால அவகாசம் வழங்கக்கூடாது எனக் கோரி நிற்கின்றோம்.
நாம் எட்டு வருடங்களாக எமது உறவுகளை இழந்து உடல், உள, பொருளாதார ரீதியில் நலி வடைந்த நிலையில் அநாதரவாக எல்லோராலும் கைவிடப்பட்ட நிலையில் உள்ளோம்.
தற்போது நாம் நம்பியிருப்பது அரசியல்வாதிகளை அல்ல. எமது இந்தநிலையை உணரக் கூடிய எங்களில் ஒருவராகிய எங்கள் மக்களையேதான். எனவே, மக்களாகிய நீங்கள் தனிப்பட்ட ரீதியிலும் பல்வேறுபட்ட சமூக அமைப்புக்கள், பல்கலைக்கழகம்,  தொழிற்சங்கங்கள், மத குருமார்கள் என்று அனைத்துத் தரப்பினரும் எமக்கு ஆதரவு தரவேண்டும். எமது போராட்டம் மூலம் எமது உறவுகளை மீட்டெடுக்க தோள் கொடுக்க வேண்டும் என்று மன்றாட்டமாக இரு கரம் கூப்பி கேட்டுக்கொள்கின்றோம்” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்