சுவீடனுக்கான ஏற்றுமதியில் மற்றுமொரு பரிமாணம்.

சுவீடனுக்கான ஏற்றுமதியில் மற்றுமொரு பரிமாணம். ஏற்றுமதியாளர்களுக்கான கொழும்பின் முன்னோடி அமர்வில் ரிஷாட் பெருமிதம். 

– சுஐப் எம் காசிம்

இலங்கைக்கும் சுவீடனுக்கும் இடையிலான வர்த்தக சந்தை ஐரோப்பிய ஒன்றிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகையை விரைவில் இலகுபடுத்துவதற்கு பெரிதும் உதவும் என அமைச்சர் ரிஷாட்  பதியுதீன் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை வணிகத் திணைக்களத்தினால் உலக வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுவீடனுக்கான ஏற்றுமதி என்ற தொனிப் பொருளிலான முன்னோடி அமர்வை நேற்று (15) அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் உரையாற்றிய போதே அமைச்சர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் புது டில்லியை தளமாகக் கொண்டியங்கும் சுவீடன் அரசியல் விவகார கவுன்ஸிலர் அன்னா உக்குல வர்த்தக கொள்கை ஆலோசகர்களான கரோலினா சுரேக், நெஸ்லி அல் முப்தி வர்த்தக திணைக்களப் பணிப்பாளர் சொனாலி விஜயரத்ன அமைச்சின் செயலாளர் சிந்தன லொக்கு ஹெட்டி உட்பட பலர் பங்கேற்றனர்.

அமைச்சர் இங்கு உரையாற்றிய போது மேலும் கூறியதாவது,

சுவீடன் சந்தையில் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அதிகளவான வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதால் எதிர்காலத்திலே ஜி எஸ் பி பிளஸ் வசதியை இலகுவில் பெறுவதற்கு இது வழி கோலும்.

இந்த நிகழ்வானது உலகளாவிய ரீதியிலான போட்டித்தன்மையில் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு அனுகூலங்களை உருவாக்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமிங்கவினதும் நல்லாட்சி அரசாங்கத்தின் தூரதிருஷ்டியான இலக்கை அடைவதற்கு இந்த செயற்பாடு வழி வகுக்கும்.

சுவீடனுடனான பாரிய வர்த்தகட்திற்கு பங்களிப்பு செய்வதற்கான இந்த விசேட அமர்வில் பங்கேற்றிருப்பவர்களை நான் பாராட்டுவதோடு உளமாற வரவேற்கின்றேன். இரண்டு நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு வர்த்தக உறவை விரிவாக்குவதற்கு பரஸ்பர தனியார் வர்த்தகர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும்.

இலங்கையில் சுவீடனின் வெளிநாட்டு முதலீடு 2013 ஆம் ஆண்டு 3.7 மில்லியன் டொலராக இருந்தது. 2014 ஆம் ஆண்டு 4.2 மில்லியன் டொலராக அதிகரித்ததை நான் சுட்டிக்காட்ட வேண்டும். இரண்டு நாடுகளுக்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. சுவீடனுடன் வர்த்தகத் தொடர்பை மேற்கொண்டு வரும் இலங்கை பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

“இலங்கை ஏற்றுமதியாளர்கள் அவர்களது ஏற்றுமதிப் பொருட்களான தெங்கு, உலர்த்தப்பட்ட பழங்கள், மரக்கறி வகைகள் ஆகிய உணவுப்பொருட்களும் கறுவா, தேயிலை, சேதனப் பொருட்கள் ஆகியவற்றை அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்கு இன்றைய அமர்வு அதி முக்கியமானதாக அமையும். இது சுவீடனுடனான வர்த்தக சந்தையை திறந்து வைப்பதோடு மட்டும் நில்லாது ஸ்கேண்டினேவியா, நோர்டிக் ஆகிய நாடுகளின் சந்தைகளில் எமது வர்த்தகர்கள் எதிர்காலத்தில் பிரவேசிப்பதற்கு பெரிதும் துணை புரியும்.

இலங்கைக்கும் இந்தியா பகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தனித்தனியான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகள் உண்டென்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுவீடன் குழுவின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். இந்த உடன்படிக்கைகளால் 8000 உற்பத்திப் பொருட்களை தீர்வையின்றி அனுப்ப முடியும் என்பதையும் தெரிவிக்கின்றேன்.

சுவீடன் முதலீட்டாளர்கள் ஏற்றுமதியாளர்களை தென்னாசியாவில் இலங்கையின் துரித அபிவிருத்திக்கு உதவுவது தொடர்பில் பரிசீலிக்குமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். சுவீடனுக்கான இலங்கையின் ஏற்றுமதி அதிகரிப்பானது 2015 ஆம் ஆண்டு 64 மில்லியன் டொலராக இருந்து 2016 இல் 69 மில்லியன் டொலராக உண்டென்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நோர்டிக் பிராந்தியத்தில் சுவீடனானது பாரிய பொருளாதார நாடாகும். புடவை, இறப்பர் உற்பத்திகள், தேங்காய்த் துருவல், விளையாட்டுப் பொருட்கள், செரமிக் பொருட்கள், தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஆகியன சுவீடனுக்கு எமது நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பிரதான பொருட்களெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கொழும்பு அமர்வின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புச் செய்வதற்காக சுவீடனின் முதல் தரதொலைக்காட்சி நிறுவனத்தின் விஷேட புகைப்படக் குழுவினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்