சுமந்திரனைக் கொலை செய்வதன் மூலம் தமிழ்மக்களது அரசியல் சிக்கல் தீர்ந்துவிடுமா?

 

அதுதானே பார்த்தேன். முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனி ஆவர்த்தனம் வாசிக்கிறார் அவரோடு ஒத்தூத யாருமே இல்லையே என்று கவலைப்பட்டேன். இதோ யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட நா.உ சிறிதரன் “நான் இருக்கப் பயமேன்” என முதலமைச்சரோடு ஒத்தூத முன்வந்திருக்கிறார்.

சுமந்திரன் மீதான கிளைமோர் தாக்குதல் என்பது திட்டமிட்ட நாடகமே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இந்தக் கொலைச் சதி முயற்சி  இராணுவத்தைத் தொடர்ந்தும் வடகிழக்கில் வைத்திருப்பதற்கான திட்டமிட்ட நாடகமா என எண்ணத்தோன்றுகின்றது என அண்மையில் வடமாகாண முதலமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார். அதனை வழிமொழிந்து  அதனை உறுதிப்படுத்துவது போல்  சிறிதரன்  கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

“அரசினதும் புலனாய்வுத்துறையினதும் திட்ட மிட்ட நாடகமெனவும் புலிகள் மீண்டும் வந்துவிட்டார்கள் என சர்வதேசத்திற்கு காட்டித் தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்கும் இராணுவத்தை தொடர்ந்தும் வைத்திருப்பதற்கும் திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டினார். அரசு தாம் விரும்பிய இடங்களில்  கிளைமோர் குண்டுகளை வைத்துவிட்டு அதனை தாமே கண்டுபிடிப்பதுபோல எடுத்து தமக்கு வேண்டியவர்களை கைது செய்வதாகவும்” சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

பயங்கரவாத விசாரணை  பொலீஸ் சந்தேக நபர்கள் கிளைமோர் குண்டுகளும் போதைப் பொருட்களும் வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் மட்டும் கைது செய்யப்பட்டார்கள் என முதலமைச்சர் விக்னேஸ்வரன் சொல்கிறார். காரணம் சந்தேக நபர்களின் இலக்கு சுமந்திரன் என பொலீஸ்  நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த பி அறிக்கையில்  குறிப்பிடப் படவில்லையாம். இதனால் பொலீஸ் தாக்கல் செய்த பி அறிக்கையில்  நா.உறுப்பினர்  சுமந்திரனை கொலை செய்ய எடுத்த முயற்சி தொடர்பிலான கருத்துக்களின் உண்மைத்தன்மை சந்தேகத்தை தோற்றுவிப்பதாக வட மாகாண முலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுகின்றார். மேலும் சந்தேக நபர்களின் இலக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் முதலமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.

பொலீஸ் நீதிமன்றத்துக்குக் கொடுத்த பி அறிக்கையில் சுமந்திரன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்பது சரி. ஆனால்  சுமந்திரனின் பெயர் குறிப்பிடப்படவில்லையே ஒழிய சந்தேக நபர்களின் இலக்கு ஒரு  முக்கிய நா.உறுப்பினர் (A VIP politician) எனப்  பொலீஸ்  நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த அறிக்கையில்  தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நா.உறுப்பினர்  சிறிதரன் சந்தேக நபர்கள் குண்டுகள் மட்டும் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளார்கள் எனச்  சொல்கிறார். ஆனால் உண்மை என்ன?

பயங்கரவாத பொலீஸ் பிரிவு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பி அறிக்கையில் போதைப் பொருள், கிளைமோர் குண்டுகள் மட்டுமல்ல ஒரு அரசியல் பிரமுகரைக் கொல்ல சதித்திட்டம் வகுத்தார்கள் என்றே சொன்னது.  ஆனால் அந்த அரசியல் பிரமுகர் யார்?  அவரது பெயர் என்ன? என்பதை பொலீஸ்  நீதிமன்றத்திற்குச் சமர்ப்பித்த பி அறிக்கையில் தெரிவிக்கவில்லை. பின்னர் கிளிநொச்சி நீதவான்  அது பற்றி பொலீசாரிடம் விசாரித்தபோது அந்த அரசியல் பிரமுகர் சுமந்திரன் எனச் சொல்லப்பட்டது. குற்றப்பத்திரிகையில் அவரது பெயரையும் சேர்க்கும்படி சொல்ல பொலீசார் அந்தப் பெயரைச்  சேர்த்தார்கள். உண்மையில் இதுதான் நடந்தது.

சுமந்திரன் அவர்களது பெயர் பொலீசாரினால் பின்னர் சேர்க்கப்பட்ட விடயம் முதலமைச்சருக்கோ  சிறிதரனுக்கோ தெரிந்திருக்கவில்லை போல் தெரிகிறது. செய்தியைக் கேட்டவுடன் அது இராணுவம் நடத்தும் நாடகம், இராணுவம் வடக்கில் தொடர்ந்து முகாமிட்டிருக்க செய்த சதி என இருவரும்  ஆரஅமர ஆராயாமல் அவசரமாகக் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எது எப்படியிருப்பினும் அதாவது முன்னாள் போராளிகளது இலக்கு சுமந்திரன்தான் என்பது தெரியாவிட்டாலும் அந்தச் செய்தி வந்ததும் விக்னேஸ்வரன் என்ன சொல்லியிருக்க வேண்டும்? சிறிதரன் என்ன கூறியிருக்க வேண்டும்? “இந்தச் செய்தி நம்பக் கூடியதாக இல்லை.  இது இராணுவம் தொடர்ந்து வடக்கில் இருப்பதற்காக வரையப்பட்ட நாடகம் என நினைக்கிறேன். இருந்தும் இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் சுமந்திரனுக்கு விடுக்கப்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் மிகவும் கண்டிக்கத்தக்கது. அது தீரவிசாரிக்கப் படவேண்டும்” என விக்னேஸ்வரன்  கூறியிருக்க வேண்டும். சிறிதரன் கூறியிருக்க வேண்டும். அது குறைந்தபட்ச நாகரிகம். பண்பாடு.  ஆனால் அந்த இருவரும் அப்படிக் கூறவில்லை. ஒரேயடியாக அந்தச் சம்பவம் பொலீசின் நாடகம் எனக் கூறிவிட்டார்கள்.

விக்னேஸ்வரன் அவர்களுக்கே சென்ற ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதையிட்டுக் குறிப்பிட்ட அவர் “எனக்குத் தொடர்ச்சியாக  கொலை அச்சுறுத்தல்  செய்தி கிடைத்த வண்ணம் இருந்தது. என்னைக் கொலை செய்துவிட்டுப் பழியைப் வி.புலிகள் மீது சுமத்த முயற்சிகள் நடந்தன.  கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் பலப்பிட்டியாவில் இருந்து ஒரு மனிதர் என்னோடு  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். தனது பெயரைச் சொன்ன அவன்  என்னையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரையும் கொலை செய்ய ருபா 25 மில்லியன் கொடுக்கப்பட்டிருப்பதாகவும்  சொன்னான். மேலும் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்ட அதே ஆள்   எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினான். ஒரு மாதத்துக்கு முன்னர் மீண்டும் தொலைபேசியில் பேசிய அவன் என்னையும் சம்பந்தரையும் கொலைசெய்ய நடக்கும் சதிபற்றிய விபரங்களைச் சொன்னான்”.

யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் பேரவை நடத்திய எழுக தமிழ் நிகழ்ச்சிக்குப் பின்னர் வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிங்களவர்கள் முதலமைச்சரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடும் சுலோக  அட்டைகளை ஏந்திச் சென்றனர்.

இந்தக் கொலைச் சதி முயற்சியைப் பற்றிக் குறிப்பிட்ட விக்னேஸ்வரன் :அரசியலில் யாரும் இந்தளவுக்கு தாழக்கூடாது. எல்லோரும் கவலைப்படும் ஒரு விடயத்தை அரசியல் வித்தையாக மாற்றக் கூடாது என வருணித்தார். ஆனால் அவரே சுமந்திரன் மீது நடத்தப்பட இருந்த கொலைச் சதி முயற்சியை அது நாடகம் என வருணித்துத் தன்னைத் தாழ்த்திக் கொண்டார். இதற்குக் காரணம் விக்னேஸ்வரனுக்கு சுமந்திரன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சிதான்! சுமந்திரனை குருவை மிஞ்சிய சீடனாக விக்னேஸ்வரன்  பார்க்கிறார்.

இந்தக் கொலைச் சதிமுயற்சி பற்றி  பொலீஸ் மாஅதிபர் விசாரணை செய்ய வேண்டும் என  வட மாகாண சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றி இருந்ததை இந்த இடத்தில் குறிப்பிட வேண்டும்.

முன்னைய காலம் போலல்லாது  முன்னாள் வி.புலிப் போராளிகளில் 5 பேரைத்தான் பொலீஸ் சந்தேகத்தின் மீது கைது செய்திருக்கிறது. உண்மையில் பொலீசாருக்கு தகவல் கொடுத்தவரே நல்லவன் என்ற இயக்கப்  பெயரைக் கொண்ட ஒரு முன்னாள் போராளிதான்.  கடந்த ஆண்டு நடந்த மாவீரர் நாளில் கிளிநொச்சியில் ரூபா 5,000 வாங்கிக் கொண்டு இரண்டொரு புலிக் கொடியை பறக்கவிட்டார். அதே ஆட்கள்தான்  தாங்கள் இனம் காட்டுகிற ஒரு அரசியல்வாதியைக் கொல்ல வேண்டும் அதற்குச் சன்மானமாக 15 இலட்சம் தருவதாக சொல்லியிருக்கிறார்கள். கொலை செய்யப்படப் போகிறவர் சுமந்திரன் என்று அறிந்ததும் அந்த முன்னாள் போராளி  பின்வாங்கி  விட்டார். பின்னர் என்ன நினைத்தாரோ தனது உறவினர் ஒருவர் மூலம் வவுனியா பயங்கரவாத விசாரணை பொலீசில் டிசெம்பர் 23, 2016 இல் முறைப்பாடு கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 5 சந்தேக நபர்களை பொலீசார் கைது செய்தார்கள். எனவே இந்தச் சதித்திட்டத்தை பொலீசார் தாமாகவே விசாரணை செய்து கண்டு பிடிக்கவில்லை.

டிசெம்பர் 24 ஆம் திகதி சனாதிபதி அலுவலகத்தைச் சார்ந்த  சாந்த பண்டாராவால் சுமந்திரனுக்கு ஒரு செய்தி  தெரிவிக்கப்பட்டது. அப்போது சுமந்திரன் யாழ்ப்பாணம் நோக்கி தனது வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். கரவெட்டியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதை சுமந்திரன் அவதானித்தார். பின்னர் அவர் கொழும்பு திரும்பினார்.

இரண்டுமுறை டிசெம்பர் 12, 2016 மற்றும் சனவரி 13 இல் சுமந்திரன் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது.   சேரன்பற்று – தாளையடி வீதியில் வைத்து கிளைமோர் குண்டை வெடிக்க வைப்பதே கொலையாளிகளின் திட்டமாக இருந்தது. ஆனால் சுமந்திரன் தற்செயலாக வேறு வாகனத்திலும் வேறு வீதிவழியே போனதால் கொலையாளிகளின் திட்டம் நிறைவேறவில்லை.

2009 மே இல் போர் ஒரு முடிவுக்கு வந்த பின்னர் ததேகூ தனது மூலோபாய தந்திரங்களைப் படிப்படியாக மாற்றிக் கொண்டது. உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்  மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளின் ஆதரவை கேட்டுப் பெற்றுக் கொண்டது. அதன் விளைவாகவே ஐநாமஉ பேரவையில் 2012, 2013, 2014 மற்றும் 2015 இல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீர்மானங்களை செம்மைப்படுத்துவதில்  சுமந்திரனுக்கும் அவரின் கீழ் தொழில் புரியும் சட்டத்தரணி ஒருவருக்கும் நிறையப் பங்குண்டு. அந்தத் தீர்மானங்களை ஜெனிவா தெருக்களில் போட்டு எரித்தவர்கள் கஜேந்திரகுமார் பொன்னபலமும் அவரைத் தாங்கிப் பிடிக்கிற புலிகள் சார்பு  அமைப்புக்களும்தான். அவர்களது கோபம் எல்லாம் சுமந்திரன் மீதே இருந்தது.

2015 சனவரியில் நடந்த சனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் சிறிசேனாவை ஆதரித்ததன் மூலம் சர்வாதிகார ஆட்சி நடத்திய இராஜபக்சா தோற்கடிக்கப்பட்டார். அதிலிருந்து  எதிர்ப்பு அரசியலைக் கைவிட்டு இணக்க அரசியலை ததேகூ கையில் எடுத்துக் கொண்டது. இந்த மாற்றத்துக்கு இரண்டு பேர் காரணம். ஒருவர் ததேகூ இன் தலைவர் சம்பந்தர். மற்றவர் நா.உறுப்பினர் சுமந்திரன்.

ததேகூ இன் புதிய அணுகுமுறையை நிலத்திலும் புலத்திலும் உள்ள தீவிர தமிழ்த் தேசியம் பேசிய சக்திகள் கடுமையாக எதிர்த்தன. 2010 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருமலையில் சம்பந்தர், யாழ்ப்பாணத்தில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிறேமச்சந்திரனை தோற்கடிக்கப் போவதாக கஜேந்திரகுமார் சபதம் செய்தார். புலத்தில் இயங்கிய புலிசார் அமைப்புக்கள் கஜேந்திரகுமாரை தேர்தலில் வெல்ல வைக்க மெத்தப்பாடுபட்டன. ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பரிதாபமாக கட்டுக்காசை இழந்தது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீதேறி அங்குத் தொங்கும் வேதாளத்தின் உடலை வெட்டி வீழ்த்தியது போல 2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புலத்தில் செயல்பட்ட  பிரித்தானிய தமிழர்  பேரவை (BTF), அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை (ICET), தமிழ் இளையோர் அமைப்பு (TYO), தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என எல்லோரும் ததேகூ யை தோற்கடிக்கக் கச்சைக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கின. கனடாவில் மாற்றத்தின் குரல் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு  பகல் இரவாக சிலர் பரப்புரை செய்தார்கள். பெருந்தொகை பணம் சேர்த்தார்கள்.  குறிப்பாக சம்பந்தரையும்  சுமந்திரனையும்  தோற்கடிக்க கங்கணம் கட்டி வேலை செய்தார்கள். புலிகளுக்கு சொந்தமான வானொலி காலை, மதியம், மாலை எனப் பாராது பரப்புரை செய்தது.

போடு புள்ளடி சைக்கிளுக்கு நேரே என்று போர் முரசம் கொட்டினார்கள். இம்முறை சுரேஷ் பிரேமச்சந்திரனும் சம்பந்தரையும் சுமந்திரனையும் அரசியல் களத்திலிருந்து அகற்ற வேண்டும் என்ற சக்திகளோடு சேர்ந்து கொண்டார். முடிவு எல்லோருக்கும் தெரிந்ததே.  மீண்டும்  கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்டுக் காசை இழந்தது.  சம்பந்தருக்கும் சுமந்திரனுக்கும் குழி வெட்டப் புறப்பட்ட பிறேமச்சந்திரன் தான் வெட்டிய குழியில் தானே விழுந்து போனார்!

புலம்பெயர் புலி ஆதரவாளர்கள் சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் என்று வசைபாடினார்கள்.  2015 பெப்ரவரி மாதம் அவர்களது உருவப் பொம்மைகளை இலண்டனில் எரித்தார்கள். அவுஸ்ரேலியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் புலி ஆதரவாளர்கள் சுமந்திரனுக்கு எதிராக கூச்சல் போட்டு அவரை  அவமானப்படுத்தினார்கள்.  ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கமரூன் பெப்ரவரி 2015 இல் யாழ்ப்பாணம் சென்ற போது அனந்தி, சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார், சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் சுமந்திரனின்  உருவப் பொம்மையைய் போட்டு எரித்தார்கள். அனந்திதான் சுமந்திரனின் உருவப் பொம்மையை தனது  காரில் எடுத்து வந்திருந்தார்.

எனவே புலம்பெயர் புலிகளும்  கஜேந்திரகுமாரின் கட்சியினரும்  தங்களது தேர்தல்  தோல்விக்கு சுமந்திரனே காரணம் என நினைக்கிறார்கள்.  அவரை அகற்றாமல் தங்களால் ஒரு அங்குலம் தன்னும் முன்னேற முடியாது எனக் கண்டு பிடித்துள்ளார்கள். இந்தப் பின்னணியில்தான் சுமந்திரன் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தி அவரைக் கொலை செய்யப் புலத்திலும் நிலத்திலும் சதித் திட்டம் தீட்டப்பட்டிருக்க வேண்டும்.  அதற்கு சில முன்னாள் போராளிகள் பலிக்கிடா ஆக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்கம் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்ப்பு அல்லது சுயதொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் இப்படியான கொலை முயற்சியில் முன்னாள் போராளிகள் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். அதற்கான அவசியம் அவர்களுக்கு இருந்திருக்காது  என சுமந்திரன் சொல்கிறார். அவரே சந்தேக நபர்கள் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் அல்லாது சாதாரண கிரிமினல் சட்டத்தின் கீழ் பொலீஸ் வழக்குத் தொடர வேண்டும் என்று கேட்டிருந்தார். ஒரு புதிய சட்டம் இயற்றப்படும் வரை பயங்கரவாதச் சட்டம் முடக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக வி. புலி ஆதரவு சக்திகள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் வேலையில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அந்தக் குதிரையில்  பணத்தைக் கட்டிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். மாறாக  விக்னேஸ்வரன் ஒரு பஞ்சகல்யாணிக் குதிரை என நினைத்து  அதில் பணத்தைக் கட்ட  முடிவு செய்துள்ளார்கள். அவரை இலண்டன், கனடா, அமெரிக்கா என்று கூப்பிட்டு ஏந்தி எடுக்கிறார்கள்.  இந்திரன், சந்திரன் என்று புகழ்கிறார்கள். அவரது பேச்சுக்களை பக்கம் பக்கமாக போட்டு ஆனந்தம் அடைகிறார்கள். தமிழ்மக்கள் பேரவை புலம்பெயர் புலி ஆதரவாளர்களின் கதை, வசனம் இயக்கத்தில் உருவானதுதான். அதற்கு  விக்னேஸ்வரனை இணைத்தலைவர்களில் ஒருவராக  நியமித்திருப்பதற்கும் அதுதான் காரணம். அவருக்கு மாலை மரியாதை செய்வதற்கும் அதுதான் காரணம்.

விக்னேஸ்வரனும் ஒரு மண்குதிரை என்பது போகப் போக அவர்களுக்குத் தெரியவரும். ஒரு மாகாண சபையை ஒழுங்காக நடத்தத் தெரியாதவர் ஒரு அரசியல் கட்சிக்கு தலைமை தாங்கி நடத்துவார் என்பது பகற் கனவு.

முடிவாக கேள்வி என்ன வென்றால் ஒரு சுமந்திரனைக் கொலை செய்வதன் மூலம் தமிழ்மக்கது சிக்கல் தீர்ந்துவிடுமா? கடந்த காலத்தில் வி. புலிகள் விட்ட பிழைகளை இப்போதும் நாம் தொடர வேண்டுமா?

 

நக்கீரன்

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்