பசும்பாலை ஆற்றில் கலந்த குற்றச்சாட்டுக்காக ஒருவர் கைது

 

டிக்கோயா பகுதியில் இயங்கி வரும் தனியார் பால் சேகரிப்பு நிலையம் ஒன்றில் இருந்து சேகரிக்கப்பட்ட பசும்பாலை ஆற்றில் கலந்த குற்றச்சாட்டுக்காக குறித்த பால் சேகரிப்பு நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் 17.02.2017 அன்று காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அட்டன் டிக்கோயா பகுதியில் நீண்ட காலமாக இயங்கி வருகின்ற இந்த பால் சேகரிப்பு நிலையத்திற்கு இப்பகுதியை சேர்ந்த தோட்டப்பகுதி மற்றும் கிராம பகுதி மக்கள் பசும்பால் வழங்கி வருகின்றனர்.

17.02.2017 அன்று காலை பால் சேகரிப்பு நிலையத்திலிருந்து அதிகபடியான பால் அருகில் ஓடுகின்ற டிக்கோயா ஆற்றில் நீருடன் கலக்கப்பட்டுள்ளது. இது குறித்து மக்கள் விசனம் அடைந்துள்ளனர்.

அதேவேளை இவ்வாறாக பால் நீருடன் கலக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் அட்டன் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

சம்பவத்தை அறிவதற்காக விரைந்த அட்டன் பொலிஸார் பால் சேகரிப்பு நிலையத்தின் உரிமையாளரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது பால் சேகரிப்பு நிலையத்தில் சேகரிக்கப்பட்ட பால் தாங்கி ஒன்றில் இருந்து கசிவு ஏற்பட்டு பால் வெளியாகியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இருந்தும் சந்தேகம் கொண்ட பொலிஸார் உரிமையாளரை கைது செய்துள்ளனர். அதேவேளை பால் சேகரிப்பு நிலையத்தில் ஊழியர் ஒருவர் மாத்திரமே கடமையில் இருந்ததாக உரிமையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் 2000 லீற்றர் பால் இவ்வாறு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்தும் சேகரிக்கப்பட்ட பால் வெளியாகுவதற்கான காரணம் சரியானாக அமையாத பட்சத்தில் உரிமையாளர் பாலை ஆற்றில் கலக்க செய்திருக்கலாம் என சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்