‘கூகுல் பலூன்’ இலங்கையை கைவிட்டு, வேறொரு நாட்டுக்கு வழங்கும் நிலையில்!!

கூகுல் பலூன்’ திட்டத்தில், அலைவரிசையை பெறுவதற்கு ஏற்பட்டுள்ள சிக்கலினால், கூகுல் நிறுவனம் இலங்கையை கைவிட்டு, அந்த வாய்ப்பை வேறொரு நாட்டுக்கு வழங்கும் நிலை ஏற்படலாம் என தொலை தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

‘கூகுல் பலூன்’ திட்டம் தொடர்பில் அரசாங்கம் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து, இந்தத்திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு, ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் நேற்று(16) இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு தெளிவுபடுத்துகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து தெரிவிக்கையில், ‘கூகுல் பலூன்’ திட்டம் தொடர்பில் முழுமையாக அறியாதவர்கள் கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். ‘கூகுல் பலூன்’ இலங்கைக்கு கிடைத்த மிகப்பெறும் வாய்ப்பாகும்.

கிரிக்கெட்,தேயிலை காரணமாக இலங்கையின் பெயர் உலகின் சில நாடுகளுக்கு மட்டுமே பிரபல்யமானது. ஏனைய நாடுகளுக்கு, இலங்கை என்றொன்று இருப்பதே தெரியாது. இந்த ‘கூகுல் பலூன்’ திட்டத்தில், ஒரு பகுதியாக நாம் இணைவதால், உலகில் தொழிநுட்ப வளர்ச்சியில் முக்கியமான நாடாக இலங்கையும் மாறிவிடும்.

மேலும், இணைய பாவனையில் ஏற்படும் அதிகரிப்பானது உள்நாட்டு உற்பத்தியில் அதிகரிப்பை ஏற்படுத்தும். இந்த திட்டமானது, இலங்கையைச் சேர்ந்த சமத் பலிகபிட்டிய என்பவரால், கூகுல் நிறுவனத்துடன் கலந்துரையாடப்பட்டு, 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்தத் திட்டத்தை கூகுல் செயற்படுத்தினாலும், அதனுடைய கிளை இலங்கையில் இல்லை. எனவே, அது மற்றுமொரு முகவர் அமைப்பான ராமா நிறுவனத்தின் ஊடாக செயற்படுத்துகின்றது.

ராமா நிறுவனத்துடன் இதுவரை எந்தவொரு ஒப்பந்தத்திலும் அரசாங்கம் கைச்சாத்திடவில்லை. எந்த வளங்களையும் அவர்களுக்கு விற்கவும் இல்லை. இந்தத் திட்டத்தை கூகுல் செயற்படுத்துவதால், அதற்காக இலங்கையால் ஒரு சதமேனும் செலவழிக்கப்படவில்லை. முதலாவது கூகுல் பலூன் விழந்த போது, மக்களின் வரிப்பணத்தை வீணாக்கியதாக குற்றஞ்சாட்டினர்.

அது தவறான கருத்தாகும். இந்த பலூன் பறப்பதற்கு 700 MHz அலைவரிசை தேவை. அதனை இலங்கை தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு இன்னும் வழங்கவில்லை. இதற்கு, சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தில் அனுமதிப் பெறுவதற்காக பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் இந்தத் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், “இருபது மில்லியன் மக்கள் உள்ள நாட்டில் 5 அலைபேசி சேவை வழங்குனர்கள் இருப்பது மிக அதிகம். தொலைதொடர்பு கோபுரங்களை மேம்படுத்த அதிக நிதி தேவை. எனவே, இந்நிறுவனங்களை இணைத்து அல்லது அனைத்து நிறுவனங்களும் இணைந்து ஒரு தொலைதொடர்பு கோபுரத்தை நிர்மாணித்தல் உள்ளிட்ட ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதற்கான சரியான திட்டமொன்று செயற்படுத்தப்பட்டால் இந்த வருட இறுதிக்குள் இணைய தரவு கட்டணத்தை குறைக்க முடியும். அதனை எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்