பலம் வாய்ந்த பார்சிலோனாவுக்கு 4 கோல்களால் அதிர்ச்சித் தோல்வி கொடுத்த PSG

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டியில் பிரபல பார்சிலோனா அணியை, பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணி (PSG) 4-0 என்ற கோல்கள் கணக்கில் அதிர்ச்சித் தோல்வியடையச் செய்து, சர்வதேச அளவில் இன்று அதிகம் கதைக்கப்படும் அணியாக தம்மை மாற்றியுள்ளது.

ஐரோப்பிய கால்பந்து சம்பியன்ஸ் லீக் சுற்றுப் போட்டிகளின் குழு மட்ட போட்டிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் நேற்றைய தினம் 16 அணிகளுக்கிடையிலான நொக் அவுட் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகின.

குழு மட்ட போட்டிகளில் மொத்தமாக 32 அணிகள் போட்டியிட்டன. அதில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களை பெற்ற அணிகள் நோக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன. அந்த வகையில் நேற்றைய தினம் இரண்டு போட்டிகளின் முதல் கட்ட ஆட்டம் (First Leg) நடைபெற்றன
பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) எதிர் பார்சிலோனா

சமபலம் மிக்க இவ்விரு அணிகளுக்கிடையிலான விறுவிறுப்பான போட்டியில் எதிர்பாராத வகையில் பார்சிலோனா அணியின் லியோனல் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் லூயிஸ் சுவாரஸ் ஆகிய அதிரடி வீரர்களுக்கு மத்தியில் 4-0 என்ற கோல்கள் கணக்கில் பரிஸ் செயிண்ட் ஜெர்மைன் கால்பந்து கழகம் வெற்றி பெற்று அதிர்ச்சியளித்தது.

ஏஞ்சல் டி மரியா தனது பிறந்த நாள் பரிசாக இரண்டு கோல்களை அடித்து இந்த போட்டியில் PSG பெற்ற வெற்றிக்கு பெரிதும் பங்காற்றினார். 29 வயதான ஏஞ்சல் டி மரியா, முதல் பாதி நேரத்தின் 18ஆவது நிமிடமும் இரண்டாம் பாதி நேரத்தின் 55ஆவது நிமிடமும் கோல்களை அடித்தார்.

அதே நேரம், எஞ்சிய இரு கோல்களையும் ஜூலியன் டிராக்ஸ்ளர் போட்டியின் 40ஆவது நிமிடத்திலும், எடின்சன் கவாணி இரண்டாம் பாதி நேரத்தியின் 72ஆவது நிமிடத்திலும் பெற்றுக் கொடுத்தனர்.

2006/07ஆம் ஆண்டுக்கு பின்னர் லியோனல் மெஸ்ஸி, நெய்மர் மற்றும் லூயிஸ் சுவாரஸ் போன்ற உலக புகழ் பெற்ற வீரர்களுக்கு மத்தியில் பார்சிலோனா அணி பெற்றுக்கொண்ட மோசமான தோல்வியாக இது கருதப்படுகின்றது.

முதல் கட்டப் போட்டியில் எதிரணியின் சொந்த மைதானத்தில் தோல்வியை சந்தித்துள்ள பார்சிலோனா, இதன் அடுத்த கட்டப் போட்டியை எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி பார்சிலோனா, கேம்ப் நொவ்வில் எதிர்கொள்ளவுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்