மருதமடு அன்னையின் பூர்வீக இடமாகிய மாந்தையில் புதிதாக அமைக்கப்பட்ட தூய லூர்து அன்னை ஆலய அபிசேகமும்,திறப்பு விழாவும்

 
மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய
‘மாந்தை திருத்தலத்தின்’ வரலாறு-
மருதமடு அன்னையின் ஆரம்ப இருப்பிடமாகிய ‘மாந்தை’ என அழைக்கப்படும் பிரதேசம் 1505ம் ஆண்டு போத்துக்கீசர் வருகையின்
பின்பும் 1656 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் வருகையின் பின்பும் ‘மாதோட்ட’ என்றும் பின்னர் ‘மாதோட்டம்’ என்றும் கால ஓட்டத்தில் ‘மாந்தை’ என்றும் மருவி வந்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றது.
1505 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் இலங்கைக்கு வருகை தந்த பின்னர் கத்தோலிக்க திரு மறையைப்பரப்பிய ஆரம்ப இடங்களில்
‘மாந்தை’ முதன்மையானதாகும். அக்காலத்தில் மாந்தையில் வாழ்ந்த பூர்வீக குடிமக்கள் கத்தோலிக்க திருமறையைப் பின் பற்றினர்.
1544ஆம் ஆண்டு சங்கிலியன் மன்னார் தீவில் 600க்கு மேற்பட்ட புதுக்கிறீஸ்தவர்களை வாழுக்கிரையாக்கியமையால்
எஞ்சியிருந்த கத்தோலிக்கர் தமது உயிரைக்காத்துக் கொள்ள பெருநிலப்பரப்புக்கு வந்து மாந்தை உற்பட பல இடங்களில் தஞ்சமடைந்தனர்.
ஆதலால் 1590 ஆம் ஆண்டில் தற்போதைய மடு அன்னையாகிய மருதமடு அன்னைக்கு மாந்தையில் ஓர் சிறு ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தனர்.
இக்காலத்தில் பிரான்சிஸ்கன் சபைக்குருக்களின் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய பணியை யாழ்ப்பாணத்திலும் மாதோட்டத்திலும்
ஆற்றிவந்தவர் பேட்றோ பெற்றன்கோர் அடிகளாவார்.
இவரே இறைவனடி சேரமுன் மாந்தையில் ஆரோக்கிய அன்னை பெயரால் ஆலயம் ஒன்றைக் கட்டியெழுப்பினார்.
மாந்தை ஆலயப்பங்கில் ஒரு பெரிய கிறீஸ்தவ சமூகம் இருந்துள்ளதால் பெற்றன்கோர் அடிகளார் இங்குள்ள ஆலயத்திற்கு ஏற்ற ஒரு மணியின் தேவையையுணர்ந்து அதனையும் செய்து ஏற்றிவைத்தார்.
1656 இல் ஒல்லாந்தர் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் கத்தோலிக்க மறைக்கு எதிரான கருத்துடைய அவர்களால் 1670இல் மாந்தையில் இருந்த அன்னையின் ஆலயம் தகர்க்கப்பட்டது.
அவ்வேளையில் அங்கு வாழ்ந்த கத்தோலிக்கர்கள் காட்டு வழியாக மாந்தை மாதாவின் சுரூபத்தை எடுத்துச் சென்று மடுக்காட்டில் மரப்பொந்தொன்றினுள் ஒழித்து வைத்தார்கள்.
இவ்வாறு ஒழித்து வைக்கப்பட்ட திருச்சுரூபம் கண்டெடுக்கப்பட்ட இடமே இன்றைய மடுத்திருப்பதியாகும்.
ஓல்லாந்தர்களினால் மாந்தை மாதாவின் இருப்பிடத்தை முற்றாக ஒழிக்க முடியவில்லை. அன்னையின் வல்லமையால் தனது ஆரம்ப இருப்பிடத்தை நிலை நாட்ட அன்னை திருவுளம் கொண்டதின் காரணமாக மடு மாதாவின் ஆரம்ப இருப்பிடத்தில் மீண்டும் ஒரு ஆலயம் கட்டியெழுப்பப்பட வேண்டுமென்ற எண்ணம் இப்பகுதி மக்களின் உள்ளத்தில் நீண்ட நாள் ஆசையாக இருந்து வந்துள்ளது.
எனினும் இதற்குப் பல எதிர்ப்பு;கள் இருந்தன. இவற்றின் மத்தியில் 1948ஆம் ஆண்டு இங்கு ஒரு லூர்து மாதாவின் கெபி அருட்திரு ஜோண் சிங்கராயர் அ.ம.தி அடம்பன் பங்குத்தந்தையாக இருந்த போது கட்ட ஆரம்பித்து 1949ல் கட்டி முடிக்கப்பட்டது.
 தற்போதைய மாந்தை கெபியின் பின்புறத்தில் முன்னைய ஆலயத்தின் முகப்புறத்தின் ஒரு பகுதி இன்றும் அழியாது காணப்படுகிறது.
இருந்தும் 1960 இற்குப்பின்னர் மாந்தையில் அன்னைக்கு ஓர் ஆலயம் அமைக்க பல முயற்சிகள் எடுத்தும் கைகூடவில்லை.
இருப்பினும் 1978ம் ஆண்டில் ஒரு முயற்சி எடுக்கப்பட்டு 1980ல் அது பூர்த்தியாகும் வேளையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக அவ்வாலயமும் முற்றாக அழிந்துள்ளது.
இதன் பின் யுத்தம் முடிவுற்ற பின்பு 2011ஆம் ஆண்டு மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அதி வந்தனைக்குரிய ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையினால் இவ்வாலையத்தற்கு அடிக்கல் நாட்டப்பட்டு குறித்த ஆலையம் அமைக்கப்பட்ட நிலையில்  18-2-2017 (இன்று சனிக்கிழமை மாலை) மன்னார் மறைமாவட்ட அப்போஸ்த்தலிக்க பரிபாலகர் அதிவத்தனைக்குரிய ஆயர் கிங்கிலி சுவாம்பிள்ளை ஆண்டகை அவர்களினால் ஏனைய ஆயர்கள் குருக்கள் துறவியர் இறை மக்கள் முன்னிலையில் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்படுகின்றது.
அதனைத் தொடர்ந்து ஆயர்கள் மற்றும் குருக்கள் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்