தமிழக சிதம்பரத்துக்கு ஈழத்தில் நிலங்கள்.

29 கார்த்திகை 2047 (14.12.2016) புதன்கிழைமை பிற்பகல் 14 மணி.

யாழப்பாணம், சேந்தான்குளம் – சண்டிலிப்பாய் சாலை. இளவாலையில் காவல் நிலையம். கிறித்தவ பெந்தக்கோசு அருட் தந்தை. என் மீது முறையிட்டிருந்தார். விசாரணைக்கு அழைத்தார்கள். சென்றேன்.

தமிழ்நாடு சிதம்பரம் கோயிலுக்குச் சொந்தமான மேட்டு நிலம். சுற்றிவர வயல்கள். அந்த மேட்டு நிலத்தில் கடம்பனும் தோழர்களும் திருப்பணியில். அங்கிருந்த கோயிலை மீளமைக்கும் பணி.

சிதம்பர நிலத்துக்குச் சொந்தமான காணிக்குச் செல்லும் மணல் சாலையின் தொடக்கம். தனியார் காணி. கடந்த ஆண்டு முதன்முறையாய அங்கு பெந்திக்கோசுத் தேவாலயம் அமைத்தவர் அருட் தந்தை.

சிதம்பர நிலத்தில் திருக்கோயில் மீளமைப்புத் திருப்பணியால் தேவாலயத்துக்கு ஊறு. சமய நல்லிணக்கத்துக்கு ஊறு. எனவே திருப்பணியை நிறுத்தவேண்டும். இளவாலை காவல் நிலையத்தில் அருட்தந்தை கொடுத்த முறைப்பாட்டின் சாரம்.

காவலர் கடம்பனிடமும் தோழர்களிடமும் சென்றனர். நாங்கள் கூலிகள், கட்டச் சொன்னவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன். கடம்பனின் விடை. எங்கே அவர்? காவலர் கேட்க, சென்னையில் உள்ளார். கடம்பன் விடை. அவர் வந்ததும் வரச் சொல்க, காவலர் பணிப்புரை. தொலைப்பேசியில் சென்னைக்கு அழைத்து நடந்ததைக் கடம்பன் கூறினார். 10.12.2016இல் சென்னையிலிருந்து மறவன்புலவு வந்தேன்.

14.12இல் இளவாலை காவல் நிலையம் சென்றேன். கடம்பனும் காண்டீபனும் உடன் வந்தனர்.

சிங்களவரான ஆய்வாளர், தமிழ்க் காவலர் மூலம் என்னைக் கேட்கிறார். திருப்பணி செய்வதை ஒப்புக்கொண்டேன். கருவறையில் என்ன கடவுள் என்றார்.

தந்தை, தாய், மக்கள், கடல், வானம், ஆறு, கல், மரம், பாம்பு என இயற்கையின் கூறுகள் அனைத்திலும் கடவுள் உள்ளார். கருவறையில் ஏதாவது ஒன்றின் படிமம் அமையும் என்றேன். அப்பரின் தேவாரம் என் கண்முன் கருத்தில் விடையாயிற்று.
மாதா பிதாவாகி மக்க ளாகி
மறிகடலும் மால்விசும்புந் தானே யாகிக்
கோதா விரியாய்க் குமரி யாகிக்
கொல்புலித்தோ லாடைக் குழக னாகிப்
போதாய மலர்கொண்டு போற்றி நின்று
புனைவார் பிறப்பறுக்கும் புனித னாகி
யாதானு மெனநினைந்தார்க் கெளிதே யாகி
அழல் வண்ண வண்ணர்தாம் நின்ற வாறே.
அப்பர் தி06094007

நிலத்துக்கு உறுதி உண்டா? யார் உரிமையாளர்? ஆய்வாளர் வினா. தில்லை நடராசரின் அடியவன் நான். அவரே என்னை அனுப்பினார். உறுதிகள் போர்க்காலத்தில் அழிந்தன. பக்கத்து வயல் உறுதியில் எல்லை சிதம்பர நிலம் என்றுளது. அது போதாதா? என்றேன்.

உரிமம் இன்றித் திருப்பணி தொடங்கலாமா? ஆய்வாளர் வினா. புராதன இந்துக் கோயில்களில் திருப்பணிக்கு உரிமம் தேவை இல்லை. புத்த சாசனத் துறையின் அரசாணை உண்டே என்றேன்.

தொலைப் பேசியில் யாரையோ அழைத்தார். சிங்களத்தில் பேசினார்.

அருட்தந்தையை ஆய்வாளர் அழைத்தார். திருக்கோயில் திருப்பணியைத் தடுக்கமுடியாது, நீங்கள் விரும்பினால் குடியியல் வழக்குத் தொடுக்கலாம், காவல் நிலையத்துக்கு வாராதீர்கள் என்றார் ஆய்வாளர்.

வெளியே வந்ததும் அருட்தந்தை சொன்னார், அளவெட்டியில் நடந்ததை மறக்காதீர், நீதிமன்றம் எங்கள் சார்பானது. நிதி வளமும் எங்களிடம். நான் சொன்னேன், அருள் வளம் எங்களிடம், வேறில்லை.

சிதம்பர நிலம் அமைந்த இடம் மறவன்புலவல்ல. 25 கிமீ. அப்பாலுள்ள பண்டத்தரிப்பின் சாந்தை ஊர். சாந்தையில் 650 சைவக் குடும்பங்கள். 5 பெந்திக்கோசுக்கு அண்மையில் மாறிய குடும்பங்கள். மாற்றியவர் அந்த அருட்தந்தை.

14.12.2016 நாளன்று முதன் முறையாகப் பண்டத்தரிப்பு, சாந்தை சென்று சிதம்பர நிலத்தையும் திருப்பணியையும் பார்த்தேன். கடம்பனும் காண்டீபனும் திருவருளை வழுத்தி, திருப்பணியைத் தொடர்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்