அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் ஆழ்ந்த மடல்…

நுரைச்சோலை வீட்டுத் திட்;டம் தொடர்பாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்திருப்பதாக ஊடகங்கள் மூலம் அறியக் கிடைத்தது. அவரது ஆர்வத்திற்கு மிக்க நன்றி. இருந்தாலும் அந்த அமைச்சரவைப் பத்திரத்தின் உள்ளடக்கத்தினையும் பின்னிணைப்புகளையும் அவதானிக்கின்றபோது, அது அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் காணி உரிமைகள் தொடர்பான அபிலாஷைகளுக்கு வேட்டு வைக்கும் நடவடிக்கையாகவே எண்ணவேண்டியிருக்கிறது. பேரினவாதிகளின் திட்டமிட்ட செயற்பாடுகளை அடியொற்றியதாகவும் இது அமைந்திருப்பது வேதனையளிக்கிறது.

அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களால் அவரது சொந்த மாகாணத்தில் பெரும்பான்மையாக முஸ்லீம்கள் வாழுகின்ற முசலி பிரதேசத்தின் காணிகளைக்கூட பாதுகாக்க முடியாமல் அவர் தடுமாறுவதனை கண்டு நாம் வேதனையடைகிறோம். அம்மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இதய சுத்தியான போராட்டத்திற்கு எங்களுடைய ஆதரவுகள் எப்போதும் இருக்கும். அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம். இச்சூழ்நிலையின் பின்னரும், அம்பாறை மாவட்டத்தில் உள்ள நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அதன் பின்னணியில் உள்ள இனவாதிகளின் சதிகள்; பற்றியும் அவர் அறியாமல் இருப்பது கவலையளிக்கிறது. நுரைச்சோலை தொடர்பான முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவசரமாக நுழைந்திருப்பது அரசியல் நோக்கம் கொண்டதாகும் என்பதனை புத்திஜீவிகள் பேசத்தொடங்கியுள்ளனர்.

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் என்பது வீடுகளுடன் மாத்திரம் தொடர்பான பிரச்சினை அல்ல. அது அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச முஸ்லீம்கள் குடியேறுவதற்கு உள்ள ஒரேயொரு மேட்டு நிலக் காணியுமாகும். கல்முனை நிந்தவூர், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேசங்களில் முஸ்லீம்கள் குடியேறுவதற்கான மேட்டு நிலக் காணிகள் பெரிதாக இல்லை என்பதனை அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் அறியாமல் இருக்க முடியாது. இம் மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு ஆலையடிவேம்பு, திருக்கோவில், நாவிதன்வெளி என அகன்ற நிலப்பிரதேசம் இருக்கையில்; அவர்கள் குடியேறுவதற்கு போதுமானளவு காணிகள் அவர்களுக்கு உண்டு. சிங்கள மக்களுக்கு – லஹூகல, தமண, அம்பாறை, உஹன, பதியதலாவ, மஹாஓயா, தெஹியத்தகண்டிய போன்ற பிரதேசங்களில் தேவைக்கும் அதிகமான காணிகள் இருந்தும் அக்காணிகளில் ஒரு இஞ்சு நிலத்தைத் தானும் முஸ்லிம்கள் குடியேறுவதற்கு இனவாதிகள் இடமளிக்கமாட்டார்கள் என்ற யதார்த்தத்தையும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் ஜீரணித்தாக வேண்டும். அம்பாரை மாவட்டத்தின் மக்கள் என்ற அடிப்படையில் இக்காணிகளிலும் எமக்கு உரிமை உண்டு என்பதை நிலைநிறுத்தி இனத்தீர்வில் முன்வைத்து நம் பின்னவருக்கு வழிசமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் நம்மவரின் பூர்வீக வயல்வெளிப் பிரதேசத்தில் அமைந்துள்ள மேட்டுநிலக் காணியான 125 ஏக்கரும், அக்கரைப்பற்று மக்களுக்கே குடியேறுவதற்கு போதாமல் இருக்கின்ற இச்சூழ்நிலையில், இப்பிராந்தியத்தில் வாழும் ஏனைய முஸ்லீம்களும்; எதிர்காலத்தில் குடியேறுவதற்கான காணிகளுள் ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இக்காணிப்பரப்பில் 40 ஏக்கரில் மாத்திரம் கட்டப்பட்டுள்ள 500 வீடுகள் பற்றி மட்டுமன்றி, மொத்தமாக 125 ஏக்கர் காணி தொடர்பாகவும் இப்பிராந்திய மக்களால் ஆழமாக சிந்திக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அன்று மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களும் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களும் இவ்விடயத்தில் கவனமாக நடந்துகொண்ட வரலாற்றினை அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் கேட்டறியவேண்டும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட எல்லா மாவட்டங்களிலும் உள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்கு மாத்திரம் வீடுகள் கொடுக்கப்படாமலும் அவர்களுக்கென்று கட்டப்பட்டதாகக் கூறப்படும் 500 வீடுகளையும் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்குவதில் உள்ள இழுத்தடிப்பு தொடர்பான பின்னணியை உணர்வதன் மூலம் மேற்சொன்ன விடயத்தைப் புரிந்து கொள்வீர்கள்.

இந்த வரலாற்றுப் பின்னணியில் முஸ்லிம் விரோத சக்தியான சம்பிக்க ரணவக்கவை தலைவராக கொண்ட கட்சியினர் முஸ்லிம்களிடமிருந்து இக்காணியை பறித்துக் கொள்வதற்காகவே உயர் நீதிமன்றம் சென்று சாதகமாக தீர்ப்பை வாங்கினார்கள். அதனைத் தொடர்ந்து, 300 வீடுகளை முஸ்லீம்களுக்கும் ஏனைய வீடுகளை மற்றைய இனத்தவர்களுக்கும் பகிர்ந்தளிப்போம் என்ற போலி நியாயத்தோடு அவர்களது உள்நோக்கத்தையும் திணிப்பதற்;கு முற்பட்டார்கள்.
எங்களுடைய பிரச்சினை 300 வீடுகள் அல்ல. அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குள் இருக்கின்ற ஒரேயொரு குடியேற்றக்காணியான 125 ஏக்கர் காணி பற்றியதாகும். இக்காணி நம்மவரின் பாரம்பரியக் காணி என்ற உரிமைப் பிரச்சினையின் அடிப்படையில்  இம்;முன்மொழிவு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்களாலும் மக்களாலும் நிராகரிக்கப்பட்டிருந்தது. அக்கரைப்பற்று பிரதேச செயலாளரினால் செயற்படுத்தப்படவேண்டிய இவ் வீட்டுத்திட்டத்தை இனவாதிகள் மேய்வதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்ற எண்ணமே வலுத்திருந்தது. இந்த உரிமைப் பிரச்சினைக்கு சாதகமான முடிவொன்று என்றாவது எட்டப்படவேண்டும் என்பதுவே அவர்களது முதன்மையான எண்ணங்களுள் ஒன்றுமாகும். அதுவரை, சுனாமியால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று மக்களின் ‘பொறுமை இழப்பினை’ முதன்மைப்படுத்தி, அவர்களுள் காணி இருப்பவர்கள் அவரவர்களின் காணியில் வீடுகள் கட்டுவதற்கு ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டது. அவர்கள் வீடு கட்டுவதற்கான முதற் கட்டப்பணமும் வழங்கி வைக்கப்பட்டது. மீதிப்பணத்தையாவது இவ்வரசாங்கம் அவர்களுக்கு வழங்காமல், அளுத்கம பேருவலை மக்களை இழுத்தடித்தது போன்று இம்மக்களையும் வஞ்சிக்கிறது.
இது இவ்வாறிருக்க தீகவாபி ரஜமஹா விகாரை என்பது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் அமைந்துள்ளது. அவ்விகாரைக்கு சொந்தமான காணிகள் தொடர்பில் பல விவாதங்கள், பேச்சுவார்த்தைகள் வரலாற்றில் நடைபெற்றிருக்கின்றன. இருப்பினும் சுமார் 600 ஏக்கர் காணி இவ்விகாரைக்குச் சொந்தமானதாக  அடையாளப்படுத்தப்பட்டு நில அளவைத் திணைக்களத்தினால் படமும் வரையப்பட்டுள்ளது. இந்தப் பெரும் பணியில் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் புத்திசாதுரியமாக தொழிற்பட்டு வழிநடாத்தியதையும், தொடர்ந்து வந்த மூத்த போராளிகளின் இது தொடர்பான செயற்பாடுகளையும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் கேட்டறியவேண்டும்.

நுரைச்சோலை 125 ஏக்கர் காணியுள்ள இடத்திலிருந்து தீகவாபி ரஜமஹா விகாரைக்கு 10 கிலோமீற்றருக்கு  மேல் தூர இடைவெளி உண்டு என்பதனை அமைச்சர் அவர்கள் சென்று பார்க்க வேண்டும். அப்போதுதான் நுரைச்சோலைக் காணிக்கும் தீகவாபி ரஜமஹா விகாரைக்கும் இடையில் போடப்பட்டுள்ள முடிச்சானது முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் இடையில் போடப்பட்ட முடிச்சைப் போன்றது என்பதனை அவரால் உணர முடியும். இது திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகும். நம்மவரின் காணிகளை பறிப்பதற்கான பெரும் சூழ்ச்சியுமாகும். என்பதனையும் அமைச்சர் அவர்கள் புரிந்து கொள்வார். வில்பத்து வில்லங்கத்தின்; பின்னராவது இவ்வாறான நமது மக்களின் காணி உரிமைகளுக்கு எதிரான சூழ்ச்சிகளை அமைச்சர் அவர்கள் புரிந்திருப்பார் என்று நம்மவர்கள் நம்பியிருக்கிறார்கள். ஆனால் ‘பாவம் முஸ்லிம்கள்’ என்றாகிவிடக்கூடாது.
இவ்விடயம் தொடர்பாக அக்கரைப்பற்று மக்களின் உரிமை தொடர்பான அபிலாஷைகளோ அல்லது அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்களின் காணி தொடர்பான அவாக்களையோ கேட்டறிவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆகக்குறைந்தது இப்பிரதேசத்து புத்திஜீவிகளின் கருத்துகளாவது கேட்டிருக்கப்பட வேண்டும். இனவாதிகளின் காணி அபகரிப்பு சதி வலைக்குள் தெரியாமல் மாட்டிக் கொண்டும், அதனூடாக தனது சுயநல அரசியல் நடவடிக்கைகளை மாத்திரம் கருத்திற்கொண்டும் செயற்படுவதாகவே இது பார்க்கப்படுகிறது. அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கின்றபோதும் அதனுடைய பின்னணியில் உள்ள உள்நோக்கம் புரியாமல் முண்டியடிக்கப்பட்டுள்ளதுவும் புலனாகிறது. இவை முஸ்லிம் மக்களின் பூர்வீகக் காணிகளை பாதுகாக்கும் தூய்மையான எண்ணங்களை வெற்றிபெறச்செய்வதற்கு தடையாகவே அமையும். இதனை அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும்; நம் மக்களுடன் புத்திஜீவிகளும் புரிந்து கொள்வர்.

அமைச்சர் அவர்களால் எமது மக்களுக்கு உதவ முடியாவிட்டாலும் உபத்திரமான செயற்பாடுகளுக்கு துணைபோகக்கூடாது என்ற தர்மத்தினையாவது அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். வில்பத்தின் விடுதலைக்காக போராடும் எம் அப்பாவி முஸ்லிம் மக்கள் இச்செய்தியினை புரிந்து கொள்வதற்கு என் சொற்களுக்கு உயிர் கொடு என்று ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த காலங்களில் இவ்வாறுதான் முஸ்லிம்களின் நிலபுல பிரச்சினைகள் தொடர்பாக அடிப்படை அறிவுகளை பெற்றுக்கொள்ளாமல் ஒரு முஸ்லிம் அமைச்சரினால் முட்புதரில் போடப்பட்ட சீலையின் கதையே நுரைச்சோலையின்; கதையுமாகும். அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களே! சற்று சிந்தியுங்கள். இந்த முட்புதரில் மாட்டிக்கொண்ட சீலையை சேதாரமின்றி சேமித்துப் பெறுவதற்கான கடமை உங்கள் மீதும் உள்ளது.
இது தொடர்பாக, இதய சுத்தியான எண்ணங்களோடும் மேற்சொன்ன பின்னணிகளின் அடிப்படையிலும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லா அவர்கள் கவனமாகச் செயற்பட்டிருக்கையில், ஊடகங்களிலே அரசியல் காரணங்களுக்காக இல்லாத பொல்லாதவைகளெல்லாம் பேசப்பட்டிருந்தது. அவதூறுகள் சொல்லப்பட்டது. வேண்டுமென்றே இவ்விடயத்தில் அவருக்குக் கரையும் பூசப்பட்டது. இருப்பினும் சமூகத்தில் கொண்ட அதீத அக்கறையினால் மௌனமாக இருந்து அவற்றையெல்லாம் ஜீரணித்துக் கொண்டார்.
இவ்வாறான நியாயங்களை அறிந்த பின்பும் 500 வீடுகளில் அதிகபட்சமான 300 வீடுகளை முஸ்லிம்களுக்கு வென்றெடுத்தோம் என்று கூற முனைவீர்களானால் அது உங்களுடைய மனச்சாட்சிக்கும் மாறான கருத்தாகவே அது அமையப்பெறும். இந்த 125 ஏக்கர் மேட்டு நிலக் காணியின் முக்கியத்துவம் பற்றி சிந்திக்கின்ற நம் அம்பாரை மாவட்ட முஸ்லிம் மக்கள் முறையான தலைமைத்துவம் இன்றி தடுமாறிக் கொண்டாலும் மக்களின் பெரும்பான்மை புத்திஜீவிகளே. அவர்கள் இந்த மனச்சாட்சிக்கு எதிரான செயற்பாட்டினை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அக்கரைப்பற்றின் இனப்பரம்பலை திட்டமிட்டு மாற்றியமைக்கும் சதியினை அம்மக்கள் அனுமதிக்கப்போவதில்லை. நம் முஸ்லிம் புத்திஜீவிகள் இதனை அங்கீகரிக்கப்போவதுமில்லை.

நல்லாட்சி உருவாகுவதற்கு முதலில் சென்றவன் என்று முண்டியடித்து பெருமை பேசப்பட்டது. கடந்த ஆட்சியின் தவறுகளை மாற்றியமைப்போம் என்று பறைசாற்றப்பட்டது. இனவாதப் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று உரத்துச் சொல்லப்பட்டது.
அமைச்சர் அவர்களே! இவ்விடயம் தொடர்பில் முஸ்லிம்களுக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என தூய்மையாக நீங்கள் எண்ணுவீர்;களானால், உங்களுடன் சக அமைச்சராக இருக்கும் கடும் போக்குவாதியான சம்பிக்க ரணவக்கவினுடைய கட்சியினரால் தொடரப்பட்ட இந்த வழக்கின் பின்னணியை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
நில உரிமை தொடர்பாக எவ்வாறான காணிச் சட்டங்கள் இருந்தபொழுதிலும் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குகின்ற அதிகாரம் அவ்வப்பிரதேச செயலாளர்களால் தீர்மானிக்கப்பட்டு உரித்துப் பத்திரங்கள் வழங்கப்படும் வழமைச் சட்டமே நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது. இந்த அடிப்படையில் நுரைச்சோலை காணியின் மீது அக்கரைப்பற்று பிரதேச செயலாளருக்கு இருக்கும் வழமையான அதிகாரத்தை பாவித்து அப்பிரதேச இனப் பரம்பல் விகிதாசாரத்திற்கு ஏற்ப வீடுகளையும் தேவைப்பட்டால் காணிகளையும் பங்கிடுவதற்கு நல்லாட்சியினை வழிவிடச் சொல்லுங்கள். சட்டத்தில் ஏதாவது பிரச்சினை இருக்குமாயின் இன்னுமொரு படிமேல் சென்று 2ஃ3 பெரும்பான்மையைக் கொண்ட நல்லாட்சி அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் குறித்த 125 ஏக்கர் காணியின் உரிமையினை அப்பிரதேச செயலாளரே பிரயோகித்து மக்களுக்கு நீதிவழங்குவதற்கு ஏற்புடையதாக சட்டமொன்றை கொண்டுவாருங்கள்.

முடியாவிட்டால் நம் முஸ்லிம் மக்களின் காணி உரிமை தொடர்பாக நியாயம் கேட்பதற்கு இலங்கையின் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உலகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக நமது புத்திஜீவிகளும் காத்திருக்கிறார்கள். அடுத்த படியினை அவர்களோடு விட்டுவிடுவோம். அவர்களுக்கு நாமும் துணையாக இருப்போம்.

இதேபோன்றுதான் இனவாத கடும்போக்காளர்களின் வலைக்குள் சிக்கிக் கொண்ட வில்பத்துப் பிரச்சினைக்கும் உச்சமான தீர்வினை இந்த நல்லாட்சி அரசாங்கம் தராவிட்டால் அடுத்த கட்டமாக மேற்சொன்ன அடிப்படையில் உயர் நீதிமன்றத்தில் நியாயம் கேட்பதற்கு முஸ்தீபுகள் செய்யப்பட வேண்டும்.
மாறாக – தம்புள்ளை, கிரேண்ட்பாஸ் போன்ற பள்ளிப் பிரச்சினைகளின் போதும் அளுத்கம கலவரத்து வேளையிலும் இனவாதி பொதுபலசேனாவின் நடவடிக்கைகளின் போதும் சூழ்ச்சிகளுக்குள் சிக்கித் தவித்த நமது மக்களின் அவலத்தை நிறுத்தப் பிரார்;த்தனையோடு செயற்படுவதற்கு முன்னுரிமை அளிப்பதை விடவும் சமூகத்தைச் சூடாக்கி வாக்குகளைப் பெறுகின்ற சூட்சுமத்திற்குப் பின்னால் சென்று, வாக்கெடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு மாத்திரம் நமது அரசியல்வாதிகளால் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது. இதனை இன்று மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கின்றனர். இச்செயற்பாடானது ஊதி ஊதிப் பெருத்து உடைந்துபோன பலூனாக மாறி நாடெல்லாம் இனவாதம் உருவெடுத்திருப்பதனையும் நம் புத்திஜீவிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறுதான் நுரைச்சோலை வீட்டுத்திட்ட விடயத்தையும் இனப்போராட்டகளமாக்கி அரசியல் செய்து விடுவார்களோ என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். எரிகின்ற வீட்டில் பிடுங்குவது இலாபம் என்ற முதுமொழிக்கு அப்பாலும் சென்று, இலாபம் பெற வீட்டையே எரிக்க முற்படுகின்றார்களா என்ற சந்தேகமும் எமது சமூகத்தின் மத்தியில் உருவாகியிருக்கிறது.
இவ்விடயங்கள் தொடர்பாக நிறைந்த அறிவு அமைச்சர் றிசாட் பதியுத்தீன் அவர்களிடம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. இருப்பினும் தன்னால் அறிந்து கொள்ள முடியாமல் போனவைகள்; தொடர்பாக கேட்டறிவதற்கு நம் சமூகத்தில் ஏராளமான அனுபவசாலிகளும், புத்திசாலிகளும் இருக்கிறார்கள் என்பதனை முதலில் அமைச்சர் அவர்கள்; ஒப்புக்கொள்ள வேண்;டும். நமது மக்களும் ஏற்றுக் கொள்வர்

ஏ.எல்.எம்.அதாஉல்லா
தலைவர் தேசிய காங்கிரஸ்
முன்னாள் அமைச்சர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்