சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலில் சரீன் வாயு: இரசாயன சோதனை மூலம் உறுதி

சிரியாவில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலில் சரீன் வாயு பயன்படுத்தப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி இட்லிப் மாகாணத்தின் மத்திய பகுதியில் உள்ள கான் ஷெய்க்குன் நகரில் நடத்தப்பட்ட இரசாயன தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் உட்பட 50க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

சிரிய அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்களே இத்தாக்குதலை நடத்தியதாக ஆரம்பத்தில் கூறப்பட்டாலும் இதற்கான ஆதராங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், இத்தாக்குதலின் பின்னணியை கண்டறிய ஐ.நா. சபை திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், தாக்குதலில் பாதிக்கப்பட்ட 10 பேரிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை இரசாயன ஆயுதங்களை தடை செய்வதற்கான அமைப்பின் (ஓ.பி.சி.டபிள்யூ) ஆய்வகத்தில் வைத்து சோதனை செய்ததில் சரீன் வாயு பயன்படுத்தி இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

இது குறித்து ஓ.பி.சி.டபிள்யூ அதிகாரிகள் கூறுகையில், “சரீன் வாயுவை பயன்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. மேலும் 7 பேரிடம் இருந்து பெறப்பட்டுள்ள மாதிரிகள் இருவேறு ஆய்வகங்களில் சோதனை செய்யப்படவுள்ளது. இன்னும் பலரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு வருகின்றது” என கூறினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்