தீப்பிடித்து எரியும் அமெரிக்க தேசியக் கொடி: காணொளியை வெளியிட்டது வடகொரியா

வடகொரியாவின் நிறுவுனர் கிம் இரண்டாம் சங்கின் 105ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சி விழாவில், அமெரிக்கா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படுவது போன்றும் அதில் அமெரிக்க தேசியக் கொடி தீப்பிடித்து எரிவது போன்றதுமான காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) வடகொரிய தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்ட குறித்த காணொளி அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

குறித்த இசை நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடத்தப்பட்டதாகவும் அதில் வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் (Kim Jong Un) கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தின் வலிமையை அதிகரிக்கும் வகையில் அமெரிக்காவால் போர்க்கப்பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதைத் தொடந்து அமெரிக்காவுக்கு எதிராக வடகொரியா அச்சுறுத்தல் விடுத்தது.

அத்துடன், அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு ஒன்றையும் வடகொரியா நடத்தியது.

வடகொரியாவின் மிலேச்சத்தனமாக செய்கைகள் தொடர்பில் அமைதி காத்து வந்த காலம் மாறிவிட்டது என முன்னதாக அமெரிக்கா தெரிவித்திருந்த நிலையில், அணுவாயுத சோதனைகளை தொடர்ந்தும் நடத்தவுள்ளதாகவும் அமெரிக்காவுக்கு எதிராக இரக்கமற்ற முறையில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் வடகொரிய பகிரங்கமாக தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்