மேடையில் மண்டியிட்டு ரசிகர்களுக்கு நன்றி சொன்ன நடிகர்!

கிளாப் போர்டு புரொடக்‌ஷன் சார்பில் சத்திய மூர்த்தி தயாரித்து நடித்து இருக்கும் படம் ‘தப்புதண்டா’. இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர் ஸ்ரீகண்டன் இயக்கியுள்ள இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட வில்லன் நடிகர் அஜய்கோஷ் மேடையில் மண்டியிட்டு தமிழக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். பின்னர் பேசிய அவர், “தமிழ் ரசிகர்களும், தமிழ் ஊடகங்களும் எனக்கு தரமான ஒரு அங்கீகாரம் பெற்று தந்திருக்கிறார்கள். இந்த கவுரவம் எனக்கு மிகப்பெரிய சொத்து.

‘விசாரணை’, ‘தப்புத்தண்டா’ படங்களில் உள்ள எனது பாத்திரங்கள், உங்கள் அனைவரின் நல்லாசியுடன், தமிழ் திரைஉலகில் நானும் ஒரு முன்னணி வில்லனாக வருவேன் என்ற நம்பிக்கையை தருகிறது” என்றார்.

நாயகன் சத்யமூர்த்தி பேசும்போது, “திரை உலகில் முதலாவதாக அடியெடுத்து வைத்திருக்கிறேன். ‘தப்புதண்டா’ ரசிகர்களுக்கு கோடை விருந்தாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்.

இயக்குனர் ஸ்ரீகண்டன், “இது எல்லோரும் ரசிக்கும் படமாக இருக்கும். அஜய்கோஷ் வில்லன் அடையாளம் இந்த படத்தில் வலு பெறும்”என்றார்.

விழாவில் பாலுமகேந்திரா மனைவி அகிலா, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, தேனப்பன், இயக்குனர்கள் சக்தி சிதம்பரம், லோகேஷ், கனகராஜ், ஸ்ரீகணேஷ், நடிகர் உதய், பிரவீன்காந்த் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்