இன்னா லில்லாஹி….!

வேறு வழியெதுவும் தோன்றாமல் மிக்க தயக்கத்தோடு அந்த முடிவுக்கு வந்தேன். சுய கௌரவமும் தன்மானமும் என்னிடமிருந்து ஒதுங்கிக் கொள்ள,அந்த நிமிடங்களில் என் மகன் மீதான பாசம் மட்டுமே நெஞ்சம் முழுதும் நிறைந்து நின்றது.
இன்னமும் சொற்ப பணமே கைத்தொலைபேசியில் எஞ்சியிருந்தது. அவசரமாக அவருக்கு அழைப்பைஏற்படுத்தினேன். மணிச் சத்தம் கேட்கத் தொடங்கியது. அவர் ஹலோ சொல்வதற்கிடைப்பட்ட அந்த நேரத்தில் என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று பரபரப்பாக ஒத்திகை செய்து கொண்டிருக்கும் போதே….
”ஹலோ…!”
அவரது குரல் கேட்டு எனக்கு வியர்த்தது. பதில் ‘ஹலோ’ சொன்னேன். எனது குரலை அவர் மறந்திருக்கக் கூடும். எனவே என் பெயர் சொல்லி ‘நான்தான் பேசுகிறேன்’ என்றேன். ”என்ன விடயம்…?” என்று நேரடியாகவே கேட்டார். எனது சுகம் விசாரிப்பார் என்று எதிர்பார்த்து, ஏமாந்தேன்.
நான் மெல்ல மெல்ல எனது தேவையைச் சொல்லி முடித்தேன்.
”ஓ…!” என்றவர் ”சற்றுப் பொறுங்கள்.” என்றார். எனது  தொலைபேசியில் மிச்சமிருக்கும் பணம் தீர்வதற்குள் அவர் நல்ல முடிவாகச் சொல்லிவிட வேண்டுமேயென்ற பதைபதைப்பு எனக்கு.
யாருடனோ அவர்  பேசுவதும் மெல்லியதாக ஒரு பெண் குரல் பதில் சொல்வதும் கேட்டது. மூன்று, நான்கு நிமிடங்களில் அவர் சொன்னார்.
”மச்சான்…இதுதானா விஷயம்..? நீ நேரே புறப்பட்டு இங்கே வா…எல்லாம் நான் பார்த்துக்கிறேன். என்ன வர்ரியா  மச்சான்..?”
போக்குவரத்துக்கு என்ன செய்வதென்ற யோசனை கிளர்ந்தெழுந்தாலும், ஏதோ நம்பிக்கையில் ”நான் இப்பவே புறப்பட்டு வர்ரேன்…!” என்று சொல்லி முடிக்க, எனது தொலைபேசி உயிரை விட்டது.
ஆஸ்பத்திரிக்குப் போய்  மனைவியிடம் தைரியத்தோடும் நம்பிக்கையோடும் இருக்கும்படிச் சொல்லிவிட்டுப் புறப்படுவோமா என்று யோசித்தேன். அதற்கான அவகாசம் இல்லை.
நேரே அந்தக் கடைக்குப் போனேன். கையிலிருந்த கைபேசியைக் கொடுத்து, நாளைக்கு மீட்பதாகச் சொல்லிக் கொஞ்சம் பணம் கேட்டேன். அதனை வாங்கிப் பலமுறை புரட்டிப் பார்த்துவிட்டு நான் கேட்டதைவிட அரைவாசி பணத்தையே கடைக்காரர் தந்தார். ”நாளைக்கு மீட்கையில்லேன்னா போன் எனக்குத்தான். அப்புறம் பிரச்சினைப்படக் கூடாது!” என்றார் கடைக்காரர்.
தலையாட்டிவிட்டுப் பணத்தை வாங்கி எண்ணிப் பார்த்த போது அது போவதற்கு மட்டுமே போதுமானதாக இருந்தது. திரும்பி வர வழி…? ம்…மச்சான் என்று கனிவோடும், உரிமையோடும் நம்மை விளித்து வரச் சொன்னவர் பணம் தராமலா போய்விடுவார்…?
அவர் வீட்டையடைந்ததும் சிரித்துக் கொண்டு வரவேற்றார். ”சரி வா போகலாம்…!” என்று கூட்டிப் போய்க் காரில் ஏற்றிக் கொண்டார். ஒருவேளை வங்கியில் பணம் எடுத்துத் தருவதற்காக இருக்குமோ…?
”நானும் வரப் போறேன்…” என்று -அவரது மகனாக இருக்க வேண்டும்-ஓடி வந்தான் அந்தப் பத்து வயதிருக்கும் பிள்ளை. ”சரி வா…!” என்று அவனை முன் ஆசனத்தில் ஏற்றிக் கொள்வதற்காக என்னைப் பின் சீற்றில் உட்காரும்படிக் கேட்டுக் கொண்டார். இறங்கிப் பின்னாசனத்தில் ஏறிக் கொண்டேன்.
புதிதாகக் கட்டப்படும் அந்தப் பெரிய வீட்டின் முன்னால் கார் போய் நின்றது.
”மச்சான்…கொஞ்சம் இதனைக் கூட்டித் துப்பரவு செய்ய வேண்டும். ஒரு ரெண்டு மணித்தியால வேலைதான். இங்கே ஆள் பிடிக்கிறதென்றால் பெரிய கஷ்டம் மச்சான். கொஞ்சம் உதவி செய்…”என்றார்.
ஆஸ்பத்திரியில் கடும் சுகவீனத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ள எனது மகன் மனக்கண் முன் தோன்றினான். ‘இங்கேயிருந்தால் மகனைக் காப்பாற்ற முடியாதுன்னும் பிரைவேட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்படியும் எல்லோரும் சொல்றாங்க….என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது, எனக்கு எம் புள்ள வேணும்!’ என்று கதறிய மனைவியின் அழுகையும் காதுக்குள் ஒலித்தது.
சரி…மளமளவென்று வேலையை முடித்துவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு போய்விடலாமென்றெண்ணி வேலையில் இறங்கினேன். கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்கள்.
மகனோடும் காரோடும் என்னை அங்குவிட்டுப் போனவர் எனது வேலை முடிந்த அடுத்த ஒரு மணி நேரம் கழித்தே வந்தார். பின்னர் என்னை அழைத்துக் கொண்டு தன வீட்டிற்கு வந்தார். மனைவியுடன் போய் ஏதோ கிசுகிசுத்தார். அதன்பின்னர் என்னிடம் வந்து அந்த மூன்று நூறு ரூபாய்த் தாள்களைத் தந்துவிட்டுச் சொன்னார்.
”மச்சான்…பஸ் செலவுக்கு வச்சுக்க….வந்து, புது வீடு கட்டுறேனில்லையா…? சரியான பணத் தட்டுப்பாடு….!”
எனக்கு அழுகை வந்தது. ”நான் உங்க கிட்ட மூவாயிரம் கேட்டேன். கிடைக்கும்னு நம்பிக்கையோடதான் வந்தேன்…!” என்று சொல்லி முடிப்பதற்கிடையில் அவரை அவரது மனைவி உள்ளிருந்து கூப்பிட்டார்.
உள்ளே போய் வந்தவர் ” மனிசிக்கு அவசரமா வெளியே போகணுமாம். உன்னை அனுப்பிப் போட்டு வரச் சொன்னா…?” என்றார். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறை.
வெளியே வந்த போது இருள் சூழ்ந்திருந்தது. நானூறு ரூபாய்க்கு போனை அடக்கு வைத்ததில் பஸ் செலவு போக எஞ்சியிருந்த இருநூற்றி என்பது ரூபாய்களுடன் இந்த முன்னூறையும் சேர்த்தால்….
பிரத்தியேக ஆஸ்பத்திரியில் மகனைச் சேர்த்துச் சிகிச்சையளிக்க இந்தப் பணம் எவ்விதத்திலும் போதாது.
என்னோடு ஒன்றாகப் படித்த, சின்ன வயதுகளில் என்னோடு ஒன்றாக விளையாடிய அந்த நண்பரா இப்படி என்னிடம் ஆறு மணித்தியாலங்கள் வேலை வாங்கிவிட்டு முன்னூறு ரூபாய் தருகிறார்…?
ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை ‘வா..போ’ என்றும் ‘அவன்-இவன்’ என்றும் பரஸ்பரம் நாம் ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டாலும், வசதி வந்துவிட்ட பின்னர் அவன் தன்னை அவ்வாறு ஒருமையில் அழைப்பது பிடிக்கவில்லையென்று வெளிப்படையாகச் சொன்னதன் பின்புதான் அவனுடனான எனது தொடர்புகளை நான் வெகுவாகக் குறைத்துக் கொண்டேன். எப்பொழுதாவது அவன் ஊருக்கு வந்தாலும் ‘வாங்க-போங்க’ என்ற பாணியில்தான் நான் பேசிக் கொண்டிருந்தேன்.
ஆனால் அந்த அவர் இன்று என்னை இப்படி ஏமாற்றிவிடுவாரென்று நான் கனவில் கூட நினைத்திருக்கவில்லை.
இரவோடு இரவாக வீடு வந்து, தூங்க முடியாமற் தூங்கி, அதிகாலை எழுந்து ஆஸ்பத்திரிக்குப் போனேன். அட…என்ன ஆச்சரியம்…மகன் ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். மனைவியின் முகத்தில் அளவற்ற திருப்தியும் புன்னகை கலந்த மகிழ்ச்சியும் நிறைந்து வழிந்தது. அவளே சொன்னாள்.
”நேற்று முழுக்க ஆஸ்பத்திரிக்கு வராமல் எங்கே போனீங்க…? படுத்த படுக்கையாகக் கிடந்த மகன்  மெல்ல எழுந்து உட்கார்ந்தான். பிறகு இறங்கி அங்காலையும் இங்காலயும் நடந்தான். அதுக்குப் பிறகு ஓடியாடத் தொடங்கிட்டான். டாக்டர்மார் வந்து பார்த்துட்டு, ‘இனி பிரச்சினையில்ல…பையன் முழுசா குணமாகிட்டான். நாளைக்கே வீட்டுக்குப் போகலாம்’னு சொல்லிட்டாங்க.”
அன்று மதியம் மகனையும் மனைவியையும்   வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்த்துவிட்டுக் கையிலிருந்த பணத்தைக் கொண்டு போய்க் கடைக்காரரிடம் கொடுத்துத் தொலைபேசியை மீட்டு, ரீ சார்ஜ் பண்ணி முடித்த சில நிமிடங்களில் தொலைபேசி மணியடித்தது.
”மச்சான்…எத்தனை முறை உனக்கு போன் பண்ண ட்ரை பண்ணேன்….போன் வேலையே செய்யேல. சரி…ஒனக்கு விஷயம் தெரியுமா…?”
”என்ன விஷயம் மச்சான் …?”
”நம்ம புதுப் பணக்காரக் கூட்டாளியும் அவரோட மகனும் இன்னிக்குக் காலையில அவரு கட்டிக்கிட்டிருக்கிற புது வீட்டுக்குப் போயிருக்கிறாங்க. மகன் என்னவோ ஓடியாடி வெளையாடிட்டிருந்திருக்கிறான். அப்போ, ஒரு சொவரு இடிஞ்சு அவன் மேல விழுந்து காலமாகிட்டானாம்…!”
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!
(யாவும் கற்பனையல்ல)
எஸ். ஹமீத்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்