மும்பை தாக்குதலின் சூத்திரதாரியை ஒப்படைக்குமாறு இந்தியா அமெரிக்காவிடம் கோரிக்கை

மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணமானவர்களான டேவிட் ஹெட்லி, ராணா ஆகியோரை ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

லஷ்கர் இ-தொய்பா தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்த தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இது குறித்த விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், குறித்த இருவரையும் ஒப்படைக்குமாறு அமெரிக்காவிற்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “அமெரிக்காவின் எப்.பி.ஐ துணை இயக்குநர் அண்ட்ரூ மெக்கபே இந்த மாத ஆரம்பத்தில் இந்தியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது இந்திய தேசிய புலனாய்வு பிரிவின் மூத்த அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தையும் மேற்கொண்டிருந்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை செய்து வரும் தேசிய புலனாய்வு பிரிவால், ஹெட்லி மற்றும் ராணா ஆகியோரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைகளுக்கு அமெரிக்கா இன்னமும் பதில் இல்லாமல் இருக்கிறது”

இந்த நிலையில், டேவிட் ஹெட்லி, ராணா ஆகிய இருவரையும் இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்காவிடம் மீண்டும் கோரிக்கை விடுப்பதாக தேசிய புலனாய்வு பிரிவை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்