அரசமைப்பு பேரவையின் அறிக்கையை அவசரமாகக் கோருகின்றார் ஜனாதிபதி! – ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் அவரே தெரிவிப்பு (photos)

அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அடுத்த இரு வாரங்களுக்குள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படும்.
நேற்று கொழும்பு கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.
இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தாம் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட்டுவிடும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
வழமைக்கு மாறாக சில மாத இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர். மனித உரிமைகள் பேரவை தீர்மானம், வடக்கு மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நடத்திவரும் போராட்டம், மீத்தொட்டமுல்ல அனர்த்தம், அரசமைப்புப் பேரவையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை, சைட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டதுடன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். சைட்டம் குறித்து சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நீண்ட நேரம் விளக்கமளித்தார்.
ஜனாதிபதி தனது ஆரம்ப உரையில் தெரிவிக்கையில்,
“அதிகாரத்துக்கு வந்து இரண்டு வருடங்கள் ஐந்து மாதங்களைப் பூர்த்தி செய்துள்ளோம். எமது செயற்பாடுகள் தொடர்பாக குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள், எதிர்ப்புகள் உள்ளபோதிலும் நீண்டகால அனுபவம் உள்ள தரப்பு என்ற ரீதியில் இலங்கையைச் சிறந்த ஒரு நாடாகக் கட்டியெழுப்பும் இலக்கை நோக்கி வெற்றிகரமாக நகருகிறோம். எமது பயணம் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் இலக்குடன் செல்கிறது. தேயிலை, றப்பர் ஆகிய பெருந்தோட்டப் பயிர்களுக்கு இப்பொழுது வெளிநாட்டுச் சந்தைகளில் உச்சவிலை கிடைக்கிறது. நாட்டில் தெங்குப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளபோதிலும், தெங்குப்பொருள் உற்பத்தியாளர்களுக்கு நல்ல சந்தைவாய்ப்பு கிடைக்கிறது. கடந்த டிசெம்பரில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட கடும் வரட்சி காரணமாக நாட்டின் விவசாயத்துறையில் 40 சதவீத வீழ்ச்சி எதிர்பார்க்கப்பட்டது. எனினும், எதிர்பாராத விதத்தில் மழைவீழ்ச்சி ஏற்பட்டதால் நிலைமை மாற்றமடைந்தது” என்று ஜனாதிபதி கூறினார்.
கொழும்புத் துறைமுக நகரம் குறித்து ஜனாதிபதி பிரஸ்தாபிக்கையில்,
“முன்னைய அரசு சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் எந்தவொரு நாட்டு அரசும் செய்துகொள்ளத் துணியாத ஒப்பந்தமாகும். அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகிலுள்ள மைதானத்தில் இருந்து துறைமுக நகருக்கு மேலாக சீனாவின் அனுமதியின்றி ஹெலிக்கொப்டர் ஒன்றில் நாம் பறக்கமுடியாது. இவற்றையே நாம் மாற்றி அமைத்து புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம்” என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்