மோடி இலங்கை வருவதை உறுதிப்படுத்தினார் மைத்திரி!

மே மாதம் நடைபெறவுள்ள வெசாக்தின ஆரம்ப நிகழ்வில் இந்தியப் பிரதமர் மோடியும், இறுதிநாள் நிகழ்வில் நேபாள ஜனாதிபதியும் கலந்துகொள்கிறார்கள் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நடைபெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட மற்றும் சில விடயங்கள் வருமாறு:-
 * குருநாகல், அநுராதபுரம், புத்தளம், திருகோணமலை, வவுனியா ஆகிய இடங்களில் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் உதவியுடன் 600க்கு மேற்பட்ட குளங்கள் புனரமைக்கப்படும்.
* கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள தீர்வையற்ற கடைகளுக்காக புதிதாக விலை மனு கோரியதன் மூலம் அரசுக்கான வருமானம் 24 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரித்தது.
* சீனாவுக்கும் இந்தியாவுக்கும் நாட்டைத் தாரைவார்த்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் கூறுவதுபோல அப்படி வழங்கவில்லை.
* சைட்டம் ஒரு தனியார் நிறுவனம். இதனை கூட்டு நிறுவனமாக மாற்ற விரைவில் முடிவுசெய்யப்படும்.
இதேவேளை, மீத்தொட்டமுல்ல அனர்த்தம் குறித்து ஓய்வுபெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டு அறிக்கை பெறப்படும் என்றும், அடுத்த ஒன்பது மாத காலத்தில் மீத்தொட்டமுல்லயிலிருந்து குப்பைமேடு முற்றாக அகற்றப்பட்டுவிடும் என்றும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
“இந்த அனர்த்தம் தொடர்பாக சுயாதீனமான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும். எந்த ஒரு நபரும் கருத்தைத் தெரிவிக்கமுடியும். ஒருமாத காலத்தில் இது செயற்படுத்தப்படும். மீத்தொட்டமுல்ல குப்பைகளை வேறு இடங்களுக்குக் கொண்டுசெல்வதற்கு எதிர்ப்புக் காட்டப்படுகிறது. எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இதன் பின்னணியில் செயற்பட்டு மக்களைத் தவறாக வழிநடத்துகின்றனர். ஊடகங்கள் இப்படியானோரின் நடவடிக்கைகளை விளம்பரப்படுத்துவதை தவிர்த்து எப்படியான வழியில் இப்படியான பிரச்சினையைக் கையாளமுடியும் என்பது குறித்து மக்களுக்கு வழிகாட்டவேண்டும்.
மீத்தொட்டமுல்ல குப்பைமேட்டால் சிலருக்கு வருமானமும் கிடைத்து வந்தது. குப்பை கொண்டுசெல்லும் தனியார் லொறிகளிடம் தரகர்கள் ரூபா ஆயிரம் முதல் ஆயிரத்து ஐந்நூறு வரை அறவிடுகின்றனர். குப்பையை அகற்ற கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நிறைவேறாதுபோனதற்கு இவர்கள் போன்றோரும் ஒரு காரணம்” – என்றும் தெரிவிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்