தெற்காசிய பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டத்தை தொகுத்து வழங்கிய இலங்கைத் தமிழர்

தெற்காசிய பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டத்தை கனடா ரொரன்ரோ நகர கவுன்சிலரான இலங்கைத் தமிழர் நீதன் ஷான் அதிகாரப்பூர்வமாக தொகுத்து வழங்கியுள்ளார்.

நேற்றுமுன் தினம் (புதன்கிழமை) ரொரன்ரோ நகர மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வை தொகுத்து வழங்கிய முதல் தமிழ் கவுன்சிலர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர், “தெற்காசிய கனடியர்கள், ரொரன்ரோ நகரத்திற்குரிய கலாசார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய பங்களிப்பை செய்துள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், ரொரன்ரோ நகர மேயர் ஜோன் டோரி, அதிகாரிகள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். 39வயதையுடைய நீதன் ஷான் கடந்த 1995 ஆண்டு இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று, கனடாவில் தனது பட்டப்படிப்புகளை முடித்த பின்னர், கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி நடைப்பெற்ற கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்றார்.

நீதன் ஷான், கனேடிய தமிழ் இளைஞர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக இயக்குனராகவும், தெற்கு ஆசியர்களுக்கு சேவை செய்யும் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்