பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகள் சிறைப்பிடிப்பு 

 
பங்களாதேஷிலிருந்து மலேசியாவிற்கு படகு வழியாக செல்ல முயற்சித்ததாக மியான்மரைச் சேர்ந்த 19 ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷின் எல்லைப்புற பகுதியான டெக்நப்பில்(Teknaf) உள்ள ஒரு வீட்டிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரோஹிங்கியா அகதிகளிடமிருந்து சுமார் 8,000 இந்திய ரூபாய்($120) பெற்றுக்கொண்டு மலேசியாவிற்கு படகு வழியாக அழைத்துச்செல்ல முயன்றதாக பங்களாதேஷைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மரில் ரோஹிங்கியா அகதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக காக்ஸ் பஜார், உக்கியா, டெநப் உள்ளிட்ட பங்களாதேஷின் எல்லைப்புற பகுதிகளில் அதிகளவு தஞ்சமடைந்துள்ளனர். இங்கிருந்து பாதுகாப்பான வாழ்வைத் தேடி மலேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்ல அகதிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இதை ஆட்கடத்தல்காரர்கள் பயன்படுத்திக்கொண்டு இவர்களிடமிருந்து பணம் பறிப்பதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் தமிழகத்திலிருந்து ஆஸ்திரேலியா செல்ல முயற்சித்ததாக 30  ரோஹிங்கியா அகதிகள்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்