வட மத்திய மாகாண சபையின் 17 உறுப்பினர்கள் மஹிந்தவுடன் ஆட்சிக் கவிழ்ப்புக் குறித்து பேச்சு! 

மைத்திரி அணி வசமுள்ள வட மத்திய மாகாண சபையின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துள்ள நிலையில், அந்த மாகாண சபையில் அங்கம் வகிக்கும் மஹிந்த அணியான பொது எதிரணிக்கு ஆதரவான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 17 பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்துக்  கலந்துரையாடியுள்ளனர்.
மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுமுன்தினம் இரவு இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட பொது எதிரணியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மத்திய மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பு அணிகளுக்கிடையில் கடும் போட்டி எழுந்துள்ளது.
மைத்திரிபாலவுக்கு ஆதரவானவர்களின் வசமுள்ள வட மத்திய மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்றப்போவதாக மஹிந்தவுக்கு  ஆதரவான அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்திருந்தார்.
பொது எதிரணியின் மே தினப் பேரணியில் பங்கேற்ற வட மத்திய மாகாண சுகாதார அமைச்சர் நந்தசேனவை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக, ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவான ஹேரத் பண்டா அமைச்சராக நியமனம் பெற்றார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹிந்த சார்பு வட மத்திய மாகாண போக்குவரத்து அமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் பதவி விலகினார்.
இதைத் தொடர்ந்து வட மத்திய மாகாண சபையில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள்  பிளவு ஏற்பட்டது.
வட மத்திய மாகாணசபையில் உள்ள 22 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களில், 17 பேர் தனியான குழுவாக செயற்படவுள்ளனர் என்று அறிவித்திருந்தனர்.
இந்தக் குழுவே நேற்றுமுன்தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக்  கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்