எந்தவொரு மாகாண சபையின் ஆட்சியையும் மஹிந்த அணியால் பிடிக்கவே முடியாது! – சு.க. திட்டவட்டம் 

மஹிந்த அணியால் வட மத்திய மாகாண சபையின் ஆட்சியையோ அல்லது வேறு எந்த மாகாண சபைகளின் ஆட்சியையோ பிடிக்கவே முடியாது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலரும் அமைச்சருமான  துமிந்த திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.
வட மத்திய மாகாண சபையின் பெரும்பான்மை மஹிந்த அணியிடம் சென்றுள்ள நிலையிலயே சு.கவின்  பொதுச் செயலர் இவ்வாறு கருத்துரைத்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது:-
“மாகாண சபைகளில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெறாது. எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார். தேசிய  அரசை ஒரே ஆண்டில் கவிழ்ப்பதாக மஹிந்த அணியான பொது எதிரணி  பரப்புரை செய்திருந்தது. அந்தப் பரப்புரையை மெய்ப்பிக்க முடியாத பொது எதிரணி தற்போது மாகாண சபைகளில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதாக அறிவித்துள்ளது.
மாகாண சபைகளில் ஆட்சி மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது. சில மாகாண சபைகளின் பதவிக் காலம் இந்த ஆண்டில் நிறைவடையவுள்ளன. சில மாகாண சபைகளுக்கான தேர்தல்களை இந்த ஆண்டில் நாம் நடாத்த உத்தேசித்துள்ளோம். வடக்கு மாகாண முதலமைச்சரைத் தவிர ஏனைய அனைத்து மாகாண முதலமைச்சர்களும் ஜனாதிபதியுடன் இருக்கின்றார்கள். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் வரையில் மாகாண சபைகளில் ஆட்சி மாற்றம் செய்யப்படாது” – என்று தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்