இலங்கை செல்லக்கூடாதென இளையராஜா வீடு முன்பு  போராடியவர்கள் கைது!

இசையமைப்பாளர் இளையராஜா வீடு முன்பு பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இலங்கையில் நடக்கவிருக்கும் இசைநிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளவுள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியை இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ராஜசிங்கம் என்பவரும், நார்வேயிலுள்ள கமல் என்பவரும் இணைந்து நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளக் கூடாதென தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை   சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழீழ மக்களிடமிருந்து பரிக்கப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழர் நிலங்கள் இன்னும் அவர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை,இன்றும் வெள்ளை வண்டியில் தமிழ் இளைஞர்கள் கடத்திக் கொள்ளப்படுகின்றார்கள,தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்படுகின்றன, கொடுமையான தமிழின அழிப்பு நடவடிக்கையாக தமிழீழ மண்ணில் சிங்களர் குடியேற்றம் விரைவுப்படுத்தப்படுகின்றது ,அரசியல் கைதிகள் விடுதலைக் குறித்து ஜனாதிபதியிடம்  வலியுறுத்தியும் இன்றளவிலும் அவர்கள்  விடுவிக்கப்படவில்லை,போர் முடிந்தநிலையிலும் இரண்டு லட்சத்திற்கும் மேலான சிங்கள படையினர் வட மாகாணத்தில் நிலைக்கொண்டிருப்பது மிகப்பெரிய ஒடுக்குமுறை நடவடிக்கை என்று வடமாகாண சபை முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ மக்கள் அடக்குமுறைக்கு மத்தியில் உரிமைகளை இழந்த அடிமைகளாக அச்சத்திற்கும், அவமானத்திற்கும் நடுவில் துடியாய் துடித்துக்கொண்டிருக்கும் இக்கால சூழலில் இவ் இசை நிகழ்வில் கலந்து கொள்ளக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் அவர்கள் விடுத்த செய்திக்குறிப்பில்
தமிழீழ மக்கள் மற்றும் பெண்கள் இணைந்து இலங்கை இராணுவத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது நிலங்களை மீட்பதற்காக போராடிவருகின்றனர்.
 முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு என்ற பிரதேசத்தில், சிறீலங்கா விமானப்படையால் கடந்த எட்டு வருடங்காளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளைவிடுவிக்கக் கோரி, கடந்த 72 நாட்களுக்கு மேலாக  பெண்கள்  தலைமையில் போராட்டம் .
 இலங்கை இராணுவத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளைவிடுவிக்கக் கோரி தீர்வின்றிய நிலையில் கிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று 43ஆவது நாளுக்கு மேலாகவும்  தொடர்கிறது
 அதே போன்று மன்னார் மாவட்டத்தின் முள்ளிக்குளம் என்ற பிரதேசத்திலும் தமது சொந்த நிலங்களை மீட்பதற்கான போராட்டம் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலங்கள்  எல்லாம் தமிழர்களின் பூர்வீக நிலங்களாகும்.
 வவுனியா மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சிமுறையிலான உணவுதவிர்ப்புப் போராட்டம் 74  நாளிற்கு மேலாகவும்  தொடர்கின்றது. இந்தப் போராட்டத்தில் பலவருடங்களாக தமது பிள்ளைகளைத் தேடிக்கொண்டிருக்கும் தாய்மாரும் ,கணவன்களை தேடிக்கொண்டிருக்கும்  துணைவிகளும் பெருமளவில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
 அதே போல் முல்லைத்தீவு மாவட்டச்செயலகம் முன்பாக    காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுழற்சிமுறையிலான உணவுதவிர்ப்புப் போராட்டம் 63  நாளிற்கு மேலாகவும்  தொடர்கின்றது.
இந்த காலக்கட்டத்தில் தமிழிசையால் புகழ்கொண்ட நீங்கள் இலங்கை செல்வது சரியானது தானா? என்பதை எண்ணிப்பாருங்கள்.
இந்நிகழ்வில் ரத்தக் கரை படிந்த சிங்கள இனவெறியர்களோடு நீங்கள் கைக்கோர்த்து நிற்கக்கூடாது என்பது எங்களின் வேண்டுகோள்.
எனவே, நீங்கள் வரும் ஜூலை  மேற்கொள்ளவிருக்கும் பயணத்தை கைவிட்டு உலகமெங்கும் வாழும் தமிழர்கள் ஒருங்கிணைந்து முன்னெடுத்துக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கு உறுதுணையாக இருப்பீர்கள் என்று நம்புக்கின்றோம்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்  வேண்டுகோளுக்கு இணங்கி தங்களின் பயணத்தை ரத்து செய்து தமிழர்களின் உணர்வை உலகத்திற்கு வெளிப்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். என்று அவர்களது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் போராட்டம்  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சட்டத்துறை செயலாளர் வை.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. இப் போராட்டத்தை  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின்  வடக்கு மண்டல அமைப்பாளர்  கரு அண்ணாமலை அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்