பஞ்சாப் அணியை வீழ்த்தி பிளே ஒஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது புனே சுப்பர்ஜெயன்ட்!

ஐ.பி.எல். தொடரின் 55ஆவது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி, புனே சுப்பர்ஜெயன்ட் அணி பிளே ஒஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

மஹராஷ்ரா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை தோற்கடித்தன் மூலம், ஐ.பி.எல். தர வரிசையில் இரண்டாம் இடத்திற்கு புனே சுப்பர்ஜெயன்ட் முன்னேறியுள்ளது.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனே அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்படுத்தாட களமிறங்கிய பஞ்சாப் அணி, 15.5 ஓவர்கள் நிறையில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 73 ஓட்டங்களை பெற்றது.

இப் போட்டியில் பஞ்சாப் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் புனே அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளுக்கு தடுமாறியிருந்தமை காணக்கூடியதாக இருந்தது.

பஞ்சாப் அணியின் துடுப்பாட்டத்தில், படேல் 22 ஓட்டங்களையும் ஷஹா 13 ஓட்டங்களையும் மார்ஷ் மற்றும் ஸ்வப்னில் சிங் ஆகியோர் தலா 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க ஏனைய வீரர்கள் இரட்டை இலக்க ஓட்டங்களைக்கூட கடக்கவில்லை.

புனே அணியின் பந்துவீச்சில், தாகூர் 3 விக்கெட்டுகளையும் உனட்கட், ஷம்பா மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

74 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாட களமிறங்கிய புனே அணி, 12 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 78 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவு செய்தது.

புனே அணியின் துடுப்பாட்டத்தில், ஆட்டமிழக்காமல் ரஹானே 34 ஓட்டங்களையும் திரிபாதி 28 ஓட்டங்களையும், ஆட்டமிழக்காமல் ஸ்மித் 15 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பஞ்சாப் அணியின் பந்துவீச்சில், படேல் மாத்திரம் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம், புனே அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறி பிளே ஒஃப் சுற்றுக்கான தகுதியை பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்