வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பில் பகுப்பாய்வு!

வடகொரியாவால் மேற்கொள்ளப்பட்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனை வெற்றியளித்தது என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என தென்கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

நேற்று நடத்தப்பட்ட குறித்த ஏவுகணைச் சோதனை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் மேற்பார்வையின் கீழேயே நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகத்தின் பேச்சாளர், “வடகொரியாவின் புதிய அணுவாயுத சோதனை தொடர்பில் அமெரிக்காவும் தகவல் அளித்துள்ளது. குறித்த ஏவுகணைச் சோதனை வெற்றியளித்ததா என்பது தொடர்பில் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

குறித்த ஏவுகணைச் சோதனை தொடர்பில் கருத்து தெரிவித்திருந்த வடகொரிய அதிகாரிகள், ஏனைய நாடுகளுக்கு பாதகம் ஏற்படாத வகையிலேயே இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டதாகவும் அந்த ஏவுகணை தரைமட்டத்திலிருந்து சுமார் 2111.5 கி.மீ உயரத்தில் 787 கி.மீ வரை சென்றதாகவும் பின்னர் மேற்கு ஜப்பானின் கடற்பகுதியில் தரையிறங்கியதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தென்கொரிய பிரஜை ஒருவர், “வடகொரியா இதற்கு முன்னும் பல ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது. அதனால் இம்முறை மேற்கொள்ளப்பட்ட சோதனை எமக்கு அவ்வளவு அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. எமது புதிய ஜனாதிபதி தெரிவித்ததைப் போல் வடகொரியாவுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என நான் நம்புகின்றேன்” என தெரிவித்தார்.

குறித்த ஏவுகணை பாரிய அளவிலான கனரக அணுவாயுதங்களை தாங்கிச் செல்லக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்