போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை சமாளிக்க நடவடிக்கை: விஜயபாஸ்கர்

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை சமாளிக்க இரண்டாயிரம் தனியார் பேருந்துகளை அதிகப்படியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வேலை நிறுத்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ள நிலையில், பேருந்து ஊழியர்களின் போராட்டத்தை முன்னிட்டு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடன் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவை தொகைக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1250 கோடியை வழங்க ஒப்புதல் அளித்த தகவலை தொழிற்சங்கத்திடம் எடுத்துரைத்தோம்.

ஆனால் இதனை சில தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துள்ளன. 47 தொழிற்சங்கங்களில் 37 தொழிற்சங்கங்கள் அரசுக்கு ஆதரவாக உள்ள நிலையில், ஏனைய 10 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் அரசியல் செய்வதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே அரசுக்கு ஆதரவாக உள்ள தொழிற்சங்க ஊழியர்களை வைத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக சென்னையில் ஓய்வு பெற்ற சாரதிகளை வரவழைத்து அவர்கள் மூலம் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் 2000 தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டு வருகிற நிலையில், மக்களின் இயல்பு நிலை பாதிக்காமல் இருப்பதற்காக ஒவ்வொரு பகுதியிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் இருந்து வெளி இடங்களுக்கு செல்லும் பேருந்துகளை இயக்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்