இலங்கை – ஐரோப்பா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு: ஜி.கே.வாசன்

இலங்கை மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கிடையில் அண்மையில் ஏற்பட்படுத்தப்பட்ட தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்

அத்தோடு, இவ் ஒப்பந்தத்தால் இந்தியாவின் ஆடை ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், “இலங்கையுடனான ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய நாட்டு நிறுவனங்கள் இலங்கையிடம் வர்த்தகம் செய்யும் போது வரிச்சலுகையை பெற முடியும். இதன் மூலம் இரு நாடுகளிடையே வர்த்தகம் பெருக வாய்ப்புள்ளது.

இதுவரை இந்தியாவில் ஆடைகளை கொள்வனவு செய்த ஐரோப்பிய நாடுகள் இனி இலங்கையிடம் அதிகமாக ஆடைகளை கொள்வனவு செய்யும் சூழல் ஏற்படும். எனவே இது இந்திய ஆடைத் தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்.

ஏற்கனவே நூல் விலை உயர்வு மற்றும் டொலர் மதிப்பில் நிலையற்ற தன்மை போன்ற பல்வேறு காரணங்களால் இந்தியாவின் ஆடைத்தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்புதிய ஒப்பந்தத்தால் இந்தியா முழுவதும் ஆடை தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தங்களின் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும்.

அதேபோல ஏற்றுமதி குறைந்து, பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு, அந்நியச் செலவாணி ஈட்டுவதிலும் பாதிப்பு ஏற்படும். எனவே இந்திய – ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை மத்திய அரசு உடனடியாக துரிதப்படுத்தி, ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்