வடக்கில் நேற்று 3 இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள்!

முள்ளிவாய்க்கால் மண் குருதியில் மூழ்கிய நாட்களை நினைவுகூர்ந்து கடைப்பிடிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை  யாழ்ப்பாணத்தில் வழக்கம்பரை, நவாலி ஆகிய இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டன.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், திருமதி அனந்தி சசிதரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றிய, தொல்புரம் வழக்கம்பரையில் முதலாவது நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்தின் மீது 1995ஆம் ஆண்டு விமானத் தாக்குதலில் மக்கள் கொல்லப்பட்டதன் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக் கல்லுக்கு அருகில் இரண்டாவது நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதேவேளை,  ரெலோவின் ஏற்பாட்டில் வவுனியா பண்டார வன்னியன் சிலைக்கு முன்பாக நேற்று மாலை 6 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
ரெலொவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். தொடர்ந்து அந்தக் கட்சியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜலிங்கம், விந்தன் கனகரட்னம், எஸ்.மயூரன் மற்றும்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா உள்ளிட்ட பலரும் சுடரேற்றினர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்