மே 18ஆம் திகதி முற்பகல் 9.30 இற்கு மூன்று நிமிடங்கள் மௌன அஞ்சலி! 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் இறுதி நாளான எதிர்வரும் மே 18ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேரம், தமிழர்கள் வாழும் தேசம் எங்கும், சிரம்தாழ்த்தி மௌன அஞ்சலியை நடத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
“மே 18ஆம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் கூடும் மக்கள் கூட்டம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடத்தும். அதேஇவேளை, வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் வாழும் தமிழ்பேசும் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்பேசும் மக்கள் ஆகியோர் காலை 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் என்ற முறையில் உங்களிடம் கோரிக்கை சமர்ப்பிக்கின்றேன்.
வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது வசதிக்கேற்றவாறு 3 நிமிட நேர மௌன அஞ்சலியில் ஈடுபடலாம். ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்படும்போது எவ்வாறு மக்கள் எங்கெங்கு நிற்கின்றார்களோ அங்கு தனித்து நின்று நாட்டுக்கு மதிப்பை அளிக்கின்றார்களோ அதேபோன்று எதிர்வரும் மே 18ஆம் திகதி காலை 9.30 மணிக்கு சகலரும் இருக்குமிடத்தில் சிரம் தாழ்த்தி 3 நிமிட நேரத்துக்கு இறந்த எம் உறவுகளுக்காக நினைவஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்.
இந்தத் தினம் வரும் வருடங்களிலும் தமிழர்தம் துக்க தினமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். முடியுமானவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு அன்றையதினம் வந்து சேர்ந்திருந்து உங்கள் அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன். பல இடங்களில் இருந்தும் மக்களை ஏற்றிவரப் பஸ்கள்  ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. பஸ்களில் ஏறக்கூடிய இடங்களையும் நேரங்களையும் உங்கள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடம் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்” – என்று கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்