இராணுவத்தை விமர்சிக்காதீர்! தொடர்ந்தால் தக்கபாடம்!! – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை  

“நான்கு ஐந்து பேரை அழைத்துக்கொண்டு போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதாகக் கூறிக்கொண்டு நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த எமது இராணுவத்தை விமர்சனம் செய்பவர்கள் தொடர்ந்து இவ்வாறு செயற்பட்டால் தக்க பாடத்தைப் புகட்டுவோம்.”
– இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.
அரநாயக்க பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக எமது இராணுவத்தினரை விமர்சிக்கின்றனர். அவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் இராணுவத்தினரின் சேவையைப் பாராட்ட வேண்டிய அளவுக்கு இராணுவத்தினர் பொறுப்புடன் செயற்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துடன் ஐந்து பேர் சுற்றி நின்று, விளக்கேற்றி இராணுவத்தினரை விமர்சிக்கின்றமை தொடர்பில் நாம் கவலையடைகின்றோம். முப்படையினர் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தின் காரணமாகத்தான் அவரால் அவ்வாறு செயற்பட முடிகின்றது என்று சிவாஜிலிங்கத்துக்குச் சொல்லிக்கொள்கின்றோம். புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பெறவே அவர் இப்படியான நாடகத்தை நடத்துகின்றார்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்