சிறைச்சாலைக்கு அருகிலேயே மயானம் அமைத்த சிரியா!

சிரியாவின் செட்னாயா (Sednaya) சிறைச்சாலையில் உயிரிழக்கும் அப்பாவி பொதுமக்களின் சடலங்களை தகனம் செய்வதற்கென, அதனருகில் ஒரு மயானம் அமைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கு தகுந்த ஆதாரங்கள் உண்டு எனவும் மத்தியகிழக்கு நாடுகள் தொடர்பான விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க துணைச் செயலாளர் ஸ்டுவர்ட் ஜோன்ஸ் (Stuart Jones) தெரிவித்துள்ளார்.

சிரியாவில் தொடரும் யுத்தம் மற்றும் மூடி மறைக்கப்படும் உண்மைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “சிரியாவில் ஆறு ஆண்டுகளாக தொடரும் யுத்தம் காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் செட்னாயா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டனர். அவ்வாறு தடுத்து வைக்கப்பட்ட மக்கள் மீது கொடுமைகள் இழைக்கப்பட்டு அவர்கள் உயிரிழக்கும் பட்சத்தில் சட்டத்தின் கைகளில் சிக்காத வண்ணம் உயிரிழந்தோரின் சடலங்கள் குறித்த மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன. சிரிய யுத்தத்தில் இதுவரை 40,000க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது. அஸாட்டின் ஆட்சிக்காலத்தில் விமான தாக்குதல்கள் பீரங்கித் தாக்குதல்கள், அணுவாயுத தாக்குதல்கள், பட்டினி மற்றும் பாலியல் வன்புணர்வுகள் தொடர்கின்றன. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது அவசியம்” என தெரிவித்தார்.

அத்துடன், சிரியாவில் தொடரும் யுத்தத்திற்கு தொடர் தாக்குதல்கள் மூலம் தீர்வு காண முடியாது என்பதை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லவ்ரோவ் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் சிரிய ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து தாக்குதல்கள் நடத்தி வந்த ரஷ்யா, தற்போது அங்கு நடத்தப்படும் தாக்குதல்களை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு தன்னால் ஆன அனைத்து கருமங்களையும் மேற்கொள்ள முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்