ஒற்றுமையுடனும் மிகுந்த விட்டுக்கொடுப்புடனும் உருவானது மன்னார் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம்.

மன்னார் நகர எல்லைக்குட்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்களது சங்கத்தின் புதிய நிர்வாகத்தெரிவிற்கான பொதுக்கூட்டம் மன்னார் நகர மண்டபத்தில் 15 -05 -2017 மாலை 2:30 மணியளவில் நடைபெற்றது.
குறித்த ஒன்றுகூடலை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார், அவரோடு வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் ஏ.நீக்கிலாப்பிள்ளை அவர்களும், மன்னார் நகரசபையின் செயலாளர் சேவியர் பிரிட்டோ லெம்பேட் மற்றும் உப போலீஸ் அதிகாரி ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
இவ் ஒன்றுகூடலுக்கு மன்னார் நகர எல்லைக்குட்பட்ட 12 முச்சக்கரவண்டி தரிப்பிடங்களை சேர்ந்த பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கலந்துகொண்டு புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது. நிர்வாக தெரிவிற்கு முன்னர் அமைச்சர் அங்கு உரையாற்றுகையில் கடந்த காலங்களில் பல முறைகேடுகள், மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்டுவந்ததாகவும் அதனால் ஒட்டுமொத்த முச்சக்கரவண்டி உரிமையாளர்களதும் நற்பெயருக்கு பங்கம் ஏற்ப்பட்டதோடு ஒரு சில முரண்பாடுகளும் தமிழ் முஸ்லீம் என்ற இனப்பாகுபாடுகளும் ஏற்பட்டு ஒரு சீரற்றநிலையில் இயங்கிய வேளையிலேயே இவ்வாறாக அனைத்து தரிப்பிடங்களையும் ஒன்றிணைத்து அவர்களது ஆவணங்கள் கோவைபண்ணப்பட்டு அவை ஒழுங்குபடுத்தப்பட்டு பரிசீலனை மேற்கொண்டபின்னர் பொதுக்கூட்டத்திற்கான திகதி அனைத்து தரிப்பிடங்களுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்ட 11 பொறுப்பாளர்களது முடிவோடு திகதி தெரிவுசெய்யப்பட்டு இன்று நாம் இங்கு கூடியுள்ளோம் என்றும், இது ஒரு நல்ல ஆரம்பமாக திகழவேண்டும் என்றும் அந்தவகையில் தெரிவுகளை மேற்கொள்ளும்போது பிரச்சினைகள் ஏதுமின்றி சரியான நிர்வாகத்தை கொண்டு நடத்தக்கூடிய ஆளுமையுள்ள நிர்வாகசபையை தெரிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில் எதிர்காலத்தில் தலைமன்னாரில் கப்பல் சேவைகள் ஆரம்பிக்கும்போது பலதரப்பட்ட சமூக சீர்கேடுகள் மற்றும் போதைப்பாவனை என்பன அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அந்தவகையில் போக்குவரத்து சேவைகளோடு தொடர்புடையவர்கள் இந்த விடயத்தில் கண்ணும்கருத்துமாக இருக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள் என்றும் அதனைவிட கடந்த காலங்களில் இடம்பெற்ற பாலியல் சேட்டைகளால் ஏற்பட்ட பாதிப்புக்களை தடுப்பதற்கு அனைத்து முச்சக்கரவண்டி உரிமையாளர்களும் முன்வரவேண்டும் என்றும் தங்களது மனைவிகளை தவிர ஏனைய பெண்களை தமது சகோதரிகளாக பார்க்கவேண்டும் அவ்வாறு ஒவ்வொருவரும் சிந்திப்போமானால் எமது சமுதாயம் எதிர்காலத்தல் ஓர் ஆரோக்கியமான நிலையை அடையமுடியும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பொதுச்சபையில் இருந்து தெரிவுகள் இடம்பெற்றது அந்தவகையில் தமிழ் முஸ்லீம் என்ற அடிப்படையில் சம அளவில் தெரிவுகள் அமைந்ததோடு போட்டி இல்லாமல் மிகவும் விட்டுக்கொடுப்போடும் மிகுந்த ஒற்றுமையோடும் புதிய நிர்வாகம் உருவானது அவ்வாறு உருவான புதிய நிர்வாகசபையினை அமைச்சரும் வாழ்த்தியதோடு இவ்வாறான ஒரு ஒற்றுமையான நிர்வாகத்தெரிவை தாம் இங்கேயே கண்டதாகவும் ஆகவே தனது உள்ளத்தில் இருந்து பாராட்டுவதாகவும் தெரிவித்தார். அந்தவகையில் புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகமானது 02 ஆண்டுகள் பதவியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் நகர முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் பதவிகள் மற்றும் பெயர் விபரங்கள் பின்வருமாறு…
தலைவர் –  கே.நாகராசா
செயலாளர் – ஏ.கே. நசுருதீன்
பொருளாளர் – எஸ்.ஏ.யுஸ்ட்டின்
உப தலைவர் – எம்.ஆர்.மவுயுத்
உப செயலாளர் – எஸ்.முருகதாஸ்
நிர்வாகசபை உறுப்பினர்கள்
01 – எஸ்.கொன்சிகன்
02 – எஸ்.நியாஸ்
03 – கே.சதாவதனன்
04 – எம்.எம்.தெளலத்
05 – எம்.றொன்சலன் குரூஸ்
06 – எச்.எம்.நிஜிமி
முச்சக்கரவண்டி தரிப்பிட பொறுப்பாளர்கள்
வெலிகம தரிப்பிடம் – வி.சாந்தகுமார்
பேரூந்து நிலைய தரிப்பிடம் – என்.எஸ்.அண்டனி பெனாண்டோ
நகரசபை தரிப்பிடம் – ஏ.ஆர்.சபர்ஜான்
பிரதேச செயலக தரிப்பிடம் – எஸ்.வரதராஜா
பொதுவிளையாட்டரங்கு தரிப்பிடம் – ஏ.சி.எல்.கரன்ராஜ்
வைத்தியசாலை தரிப்பிடம் A – வெ.கிருஷ்ணகுமார்
வைத்தியசாலை தரிப்பிடம் B – மா.குமரேஸ்வரன்
கமுதாவ தரிப்பிடம் – எஸ்.ஜெனிபெட் லியோ
எழுத்தூர் தரிப்பிடம் – எஸ்.நிசாந்தன்
மீன்சந்தை தரிப்பிடம் – எஸ்.நிமலகாந்தன்
இலங்கை வங்கி தரிப்பிடம் – கே.எம்.ஜாபிர்
பள்ளிமுனை தரிப்பிடம் – என்.சுவக்கீன் றோச்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்