துண்டு துண்டாய்க் கிழித்து குப்பைத் தொட்டிக்குள் வீசுவேன்!!

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவை வெற்றி பெற வைப்பதற்குப் பாடுபட்ட சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் பலர் மைத்திரியின் வெற்றியைத் தொடர்ந்து மைத்திரியுடன் இணைந்துகொண்டதை நாம் அறிவோம்.அவ்வாறு இணைந்தவர்களுள் அதிகமானவர்கள் 50இற்கு 50 என்ற நிலைப்பாட்டில்தான் இன்றும் உள்ளனர்.

அதாவது,மஹிந்த அணியையும் இணைத்துக் கொண்டு போனால்தான் அடுத்த தேர்தல்களில் சுதந்திர கட்சியால் வெற்றி பெற முடியும்;தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

இந்த இரண்டு அணியையும் இணைப்பதற்கு அவர்கள்தான் கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.மைத்திரியும் வேண்டும் மஹிந்தவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர்.

அவ்வாறானவர்களுள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீரவும் ஒருவர்.

இரண்டு தரப்பையும் ஒன்றிணைப்பதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டு தோற்றுப் போனார்.ஆனால்,மேதினக்  கூட்டத்தின் பின் அந்த முயற்சியை மீண்டும் தொடருமாறு சிலர் அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனராம்.

ஆனால்,கடந்த காலங்களில் தான் அவ்வாறு முயற்சிகளை மேற்கொண்டபோது எதிர்கொண்ட கசப்பான அனுபவங்களையெல்லாம் அவர் அவர்களிடம் பகிர்கின்றாராம்.

மஹிந்த அணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசுவதற்காக உத்தியோகபூர்வ  அழைப்புகளை தயார் செய்யும்போதே மஹிந்த அணியில் இருந்து நிராகரிப்பு வந்துவிடுமாம்.

அழைப்புக் கடிதம் அனுப்பப்படவுள்ளதை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் விமல் வீரவன்ஸ ”கடிதம் வந்தால் கிழித்துக் குப்பைத் தொட்டிக்குள் வீசுவேன்”என்று செய்தி அனுப்புவாராம்.

இதனால் அனுப்பியும் பிரயோசனம் இல்லை என்பதை அறிந்து அழைப்புவிடுக்கும் வேலையை அப்படியே நிறுத்திவிடுவாராம் அமரவீர.இப்போது அந்த கசப்பான அனுபவங்களையெல்லாம் சொல்லிப் புலம்புகிறாராம் அமைச்சர்.

[எம்.ஐ.முபாறக்- சிரேஷ்ட ஊடகவியலாளர் ]

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்