ரான்சம்வேர் வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க டிப்ஸ்

 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகமை உருவாக்கிய இணையவழி தாக்குதல் கருவிகள் மூலம் உலகம் முழுக்க 150-க்கும் அதிகமான நாடுகளை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் கணினிகளை ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்கியது. உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ரான்சம்வேர் வைரஸ் மூலம் பல்வேறு நிறுவனங்கள் முடங்கியுள்ளது.

இந்த தாக்குதல் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளை கடுமையாக பாதித்து உள்ளது. அதன்படி சீனாவின் மிகப்பெரிய எரிசக்தி விநியோக நிறுவனமான ‘பெட்ரோசீனா’, தனது கட்டுப்பாட்டில் உள்ள சில பெட்ரோல் நிறுவனங்களின் நிதி கட்டமைப்பு முடங்கியதாக அறிவித்துள்ளது. நாட்டின் போலீஸ், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களும் இந்த தாக்குதலால் முடங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ரான்சம்வேர் வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,

மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும்:

 

இணைய உலகை அச்சுறுத்தி வரும் ரான்சம்வேர், மென்பொருள் அப்டெட் செய்யாதவர்களை இ-மெயில் மூலம் பாதித்து வருகிறது. இதன் பின் மால்வேர் கோடு, விண்டோஸ் ஃபைல் ஷேரிங் அமைப்பு மூலம் மற்ற கணினிகளையும் பாதிக்கும். இந்த சைபர் தாக்குதலுக்கு முன்பாகவே மைக்ரோசாஃப்ட் அப்டேட் வழங்கியிருந்தது. அதன்படி புதிய செக்யூரிட்டி அப்டேட் செய்தவர்களுக்கு ரான்சம்வேர் தாக்குதலால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

இதுபோன்ற அச்சுறுத்தல்களில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க செக்யூரிட்டி அப்டேட்களை சீராக செய்திருக்க வேண்டும். இதற்கு விண்டோஸ் இயங்குதளங்களில் ஆட்டோமேடிக் அப்டேட் ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும்.

தற்போதைய ரான்சம்வேர் தாக்குதல் விண்டோஸ் இயங்குதளங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டிருந்தது. எனினும் எதிர்காலத்தில் மேக் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களையும் இதுபோன்ற ரான்சம்வேர் வைரஸ்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம் என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டி வைரஸ் மென்பொருள்:

 

விண்டோஸ் இயங்குதளத்தை அப்டேட் செய்திருப்பதோடு, ஆண்டி வைரஸ் மென்பொருளும் உங்களது கணினியை வைரஸ் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும். இதோடு ஆண்டி வைரஸ் மென்பொருள்களையும் அப்டேட் செய்திருக்க வேண்டும். அப்டேட் செய்யாத நிலையில் ஆண்டி வைரஸ் மென்பொருள் புதிய மால்வேர்களை தடுக்க முடியாமல் போகும் என சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மின்னஞ்சல் மற்றும் பாப்-அப்கள்:

 

ரான்சம்வேர் வைரஸ் பெரும்பாலும் மின்னஞ்சல் மூலம் அதிகளவு பரவியுள்ளது என பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தேவையற்ற மின்னஞ்சல்களை கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். தேவையற்ற மின்னஞ்சல்களை கண்டறிவது எப்படி?

பொதுவாக இதுபோன்ற மின்னஞ்சல்களை அனுப்பியவர் முகவரி, அல்லது மற்ற தகவல்களில் எழுத்து பிழை அதிகம் இருக்கும். இத்துடன் மின்னஞ்சல்களில் மற்ற தளங்களுக்கான இணைய முகவரிகள் ஹைப்பர்லிண்க் செய்யப்பட்டிருக்கும். இவற்றை கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும்.

தரவுகளை பேக்கப் எடுக்க வேண்டும்:

 

ஒருவேளை உங்களது கணினி ஹேக்கரால் பாதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் ஏற்கனவே பேக்கப் எடுத்து வைத்திருந்த தகவல்களின் உதவியுடன் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும்.

இதற்கு பேக்கப் வைத்துள்ள தகவல்களை மற்றொரு கணினியில் சரிபார்த்துவிட்டு, பின் உங்களது கணினியில் உள்ள தகவல்களை முற்றிலுமாக அழித்து விடலாம். முழுமையாக அழித்த பின் பேக்கப்பில் இருந்து தகவல்களை மீண்டும் ரீஸ்டோர் செய்து கொள்ளலாம்.

பொதுவாக உங்களது தகவல்களை முன்கூட்டியே பேக்கப் எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு செய்யும் போது, ரான்சம்வேர் அல்லது மற்ற மால்வேர் தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டிருந்தால் பேக்கப் தகவல்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால் என்ன செய்வது:

 

ரான்சம்வேர் மூலம் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்தால், முதலில் உங்களது கணினியின் இண்டர்நெட் இணைப்பை துண்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மற்ற கணினிகள் பாதிக்கப்படாமல் இருக்கும். இனி ரான்சம்வேர் குறித்து புகார் அளித்து, உங்களது தகவல்களை மீட்க தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியை நாடலாம். இல்லையெனில் புதிய பாதுகாப்பு கருவிகளை கொண்டு உங்களது தரவுகளை எதிர்காலத்தில் அன்லாக் செய்ய முடியும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்