ஜனாதிபதி தேர்தல் குறித்து சோனியா காந்தியுடன் மம்தா பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை மேற்கு வங்காள முதலமைச்சரான மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி நிறைவடையவுள்ளதோடு, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துள்ள மம்தா பானர்ஜி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா கருத்து தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நியமிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. எனினும் வேட்பாளராக இன்னும் யாரையும் நியமிக்கவில்லை. நாட்டுக்காக உழைக்கக்கூடிய ஒருவரை பொதுவான வேட்பாளராக தெரிவு செய்ய முன்னுரிமை அளிப்போம். அவர் நாட்டுக்கு சிறந்த வேட்பாளராக இருப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அந்த வகையில் அவர் ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதலமைச்சருமான  நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா உள்ளிட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்