ஹொண்டுராஸில் பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளுக்கு கைதிகள் இடமாற்றம்

ஹொண்டுராஸில், நெரிசல் நிறைந்த சிறைச்சாலையில் குற்றம்சார்ந்த நடவடிக்கைகளை சமாளிக்கும் வகையில் நூற்றுக்கணக்கான கைதிகள் அதிகூடிய பாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கனரக பாதுகாப்பு படையினர், இராணுவம் மற்றும் பொலிஸ் பாதுகாப்புடன் பாரிய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் தமாரா சிறைச்சாலையிலிருந்து லா ரொல்வா சிறைச்சாலைக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) இடமாற்றப்பட்டனர்.

மேற்குறித்த லா ரொல்வா சிறைச்சாலையானது கிராமப்புற பகுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு அமைந்துள்ளது.

இது குறித்து தலைநகர் டெகுசிகல்பாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி ஜூவான் ஒர்லாண்டோ தெரிவிக்கையில், 2000 கைதிகள் லா ரொல்வா மற்றும் எல் போஸோ சிறைச்சாலைகளுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த இரு சிறைச்சாலைகளிலும் போதைப்பொருள் நடவடிக்கைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் இடம்பெறுவது சாத்தியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஹொண்டுராஸில் 30 சிறைச்சாலைகளும் 17 ஆயிரம் கைதிகளும் இருப்பதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹொண்டுராஸ் ஆனது ஐக்கிய நாடுகள் சபையினால் கொலைகார நாடுகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டில் நாட்டின் படுகொலை வீதம் 59.1 ஆக கணக்கிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்