இன்றைய அரசாங்கத்தின் முஸ்லிம்கள் மீதான பார்வையின் மூலம் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துள்ளதா ? என்ற கேள்வி எழுகிறது:முழக்கம் அப்துல் மஜீட்

  ( எஸ்.அஷ்ரப்கான்)

இன்றைய அரசாங்கத்தின் முஸ்லிம்கள் மீதான பார்வையின் மூலம்  சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்துள்ளதா ? என்ற கேள்வி எழுகிறது என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின்  தவிசாளர்
முழக்கம் அப்துல் மஜீட்  குறிப்பிட்டுள்ளார்.
இது விடயமாக மேலும் அவர் குறிப்பிடும் போது,
இன்றைய நல்லாட்சி  அரசாங்கம் அமைவதற்கு இலங்கை முஸ்லிம்கள் நூறு வீதமான பங்களிப்பை செய்துள்ளனர். கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் முஸ்லிம்களின் அரசியல், பொருளாதார, ஆன்மீக உரிமைகளுக்கு பௌத்த சிங்கள அடிப்படைவாதிகளினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. அந்நிலையில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதன் நோக்கமாக இன்றைய நல்லாட்சி  அரசை உருவாக்குவதில் முஸ்லிம் மக்கள் அளப்பரிய பங்காற்றியிருந்தனர். இன்றைய அரசிலும் அதே நிலைமை தொடர்ந்து கொண்டு வருவதனை முஸ்லிம் மக்கள் தொடர்ந்தும் அனுமதிக்கப்போவதில்லை. சட்டத்தினை நிலைநாட்டுவதில் நல்லாட்சி அரசு பாரபட்சம் காட்டுவதாக தெரிகிறது. சிங்கள பௌத்த  இனவாத அமைப்புக்கள் சட்டத்தை கையிலெடுத்துக்கொண்டு காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டு வருவதனை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றது. நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் நடவடிக்கைகள் ஞானசாரா தேரரின் அத்துமீறிய செயல்களுக்கு ஆதரவு வழங்குவது போல் அமைகின்றன.
சிறுபான்மை மக்களின் அரசியல், பொருளாதார, கலாசார மற்றும் ஆன்மீக விடயங்களுக்கு பொதுபல சேனா, ராவண பலய, சிங்கள ராவய போன்ற அமைப்புக்களால் விடுக்கப்பட்டு வரும் அச்சுறுத்தலை ஜனாதிபதியும் பிரதமரும் இனியும் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.சட்டம் அதன் கடமையை செய்வதில் சிறுபான்மை மக்களுக்கு தாமதம் செய்வது ஏன்? ஞானசார தேரரின் அடாவடித்தனங்களை பொலிஸார் கண்டும் காணாமல் இருப்பதுடன் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்வதிலும் அலட்சியம் செய்வதாக அறிய முடிகிறது. சட்டம்  மற்றும் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் சாகல ரத்நாயக்க இது விடயத்தில் துரித நடவக்கை எடுத்து நாட்டில் குழப்பங்களை விளைவிக்க முற்படும் ஞானசார தேரர் போன்றோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். முஸ்லிம்களின் பள்ளிவாசல்களின் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதும்  எங்களின் பாரம்பரிய நிலங்களின் மீது மேலாதிக்கம் செய்து அபகரிக்க முற்படுவதும் முஸ்லிம் சமூகத்தின் வாழ்வுரிமைக்கு விடும் பாரிய சவாலாகும்.
இத்தகைய போக்குகள் தொடர்ந்தும் நீடிப்பது நல்லாட்சி அரசு என்ற சொல்லுக்கு உகந்ததல்ல. சிறுபான்மை மக்களின் ஆதரவோடு நாட்டின் தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் நடவடிக்கைகள் திருப்தி தருவதாக அமையவில்லையென மக்கள் ஆதங்கப்படுகின்றனர். மஹிந்த ராஜபக்ச அரசிற்கும் நல்லாட்சி  அரசிற்கும் உள்ள வேறுபாடு என்னவென்று  கேள்வியெழுப்புகின்றனர்.
ஐ.நாவினால் பிரகடஞ்செய்யப்பட்ட சர்வேதேச வெசாக் தினத்தை அரசு அண்மையில் கொண்டாடியது. கௌத்தம புத்தர் போதித்த தத்துவங்களை சில பௌத்த தேரர்கள் மறந்து செயற்படுகின்றனர். அன்பு, கருணை, இரக்கம் போன்ற நல்ல போதனைகளை புத்தர் போதித்தார். அவரது போதனையை ஏற்றுக்கொண்டு வழிபடுகின்றவர்கள் அதற்கு மாறாகவே செயற்பட்டு வருகின்றனர். அவரது தத்துவங்களை சிரமேற்கொண்டு இன்றைய நல்லாட்சி அரசாங்கம் செயற்படுமானால் நாட்டில் வாழும் அனைத்து சமூகங்கள் மத்தியிலும்  சகோதரத்துவம், நல்லிணக்கம் சம உரிமை போன்றன சிறந்து விளங்க வழி வகுக்கும். சிங்கள இனவாத அமைப்புக்களின் செயற்பாடுகளை அரசு தொடர்ந்தும் அனுமதிக்குமானால் ராஜபக்ச அரசுக்கு சந்தித்த வீழ்ச்சியை இன்றைய அரசும் சந்திக்க வேண்டிய நிலை விரைவில் ஏற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்