இலங்கை சிங்கள பௌத்த நாடு! அனைவரும் இதை ஏற்கவேண்டும்!!

இலங்கை சிங்கள பௌத்த நாடு! அனைவரும் இதை ஏற்கவேண்டும்!! – இல்லையேல் நல்லிணக்கம் சாத்தியமில்லை என்கிறார் ஞானசார தேரர் (photos)
“இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு. இதை அனைவரும் ஏற்றாகவேண்டும். எனவே, வந்தேறுக்குடிகளான  தமிழ், முஸ்லிம் மக்கள் எமது (பௌத்தர்களின்) கலாசாரம், மொழியைக் கற்கவேண்டும். அப்போதே நல்லிணக்கம் சாத்தியமாகும்.”
– இவ்வாறு தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனிடம் கடுந்தொனியில் எடுத்துரைத்தார் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர்.
தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரான மனோ கணேசனை சந்தித்துப் பேச்சு நடத்துவதற்காக பொதுபலசேனா அமைப்பு தலைமையிலான கடும்போக்குடைய சிங்கள, பௌத்த தேசியவாத  அமைப்புகளின் பிரதிநிதிகள் அவரது அமைச்சுக்கு நேற்று முற்பகல் சென்றிருந்தனர்.
அமைச்சரைச் சந்தித்துப் பேசிய இக்குழுவினர், குறித்த அமைச்சுப் பதவியை வகிப்பதற்கு தாங்கள் தகுதியற்றவர் எனக் குறிப்பிட்டதுடன், முஸ்லிம்மக்களுக்கு எதிராகவும் கருத்துகளை முன்வைத்தனர்.
இதன்போது அமைச்சருக்கும், பௌத்த தேரர்களுக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அத்துடன், இலங்கையானது சிங்கள பௌத்தருக்குரிய நாடு என்பதை அனைவரும் ஏற்கவேண்டும் என கலகொட அத்தே ஞானசார தேரர் அமைச்சர் மனோ கணேசனிடம் மீண்டும் மீண்டும் இடித்துரைத்தார்.
இதன்போது கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறியவை வருமாறு:-
“இலங்கையானது சிங்கள பௌத்தர்களுக்குரிய நாடு. எனவே, வீட்டு உரிமையாளர் இருக்கும்போது, அந்த வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களிடம் வீட்டுப் பிரச்சினை பற்றிப் பேசமுடியுமா? எனவே, பிரச்சினை பற்றி எங்களிடம்தான் பேசவேண்டும்.
இலங்கை சிங்கள  பௌத்தர்களுக்குரிய நாடு என்பதை ஏற்கின்றீர்களா? அவ்வாறு ஏற்காவிட்டால் ஒருபோதும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
இங்கு குடியுரிமையை ஏற்படுத்தியது நாம்தான் ( சிங்கள  பௌத்தர்கள்).  கலை, கலாசாரங்களை உருவாக்கியதும் நாம்தான். மகாவம்சத்தில் இந்த விடயம் தெட்டத்தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வெட்டுகளிலும் அது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தமிழ், முஸ்லிம் மக்கள் இங்கு வந்து குடியேறியவர்கள். எனவே. இது யாருடைய நாடு என்பதை புரிந்துகொண்டால்தான் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும். இதை ஏற்காமல் இருப்பதுதான் தவறு.
அதேவேளை, ஜப்பான், இத்தாலி, ஜேர்மான் ஆகிய நாடுகளுக்குச் சென்றால் அந்நாட்டின் மொழிகளை கற்கவேண்டும். ஆனால், இங்கு என்ன நடக்கின்றது? எமக்கு வேறுமொழிகளைக்  கற்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் தவறிழைத்தால் அங்கொடைக்கும், சிங்களவர்கள் தவறிழைத்தால் வெலிக்கடைக்கும் அனுப்பப்படும் நிலையே காணப்படுகின்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின்போது அத்துமீறி நுழைந்த முஸ்லிம் ஒருவர் அங்கொடைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
முஸ்லிம்கள் பற்றி கடந்த காலங்களில் பேசியபோது பின்னணியில் மஹிந்த என்றனர்; கோட்டா என்றனர். அதன்பின்னர் நோர்வே என்றனர். ஆனால். நாம் உண்மையையே பேசினோம்.
எல்லாப் பள்ளிவாசல்களும் பங்கர்களாகியுள்ளன. ஐ.எஸ். உறுப்பினர்கள் இருக்கின்றனர்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்