இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இவ்வருடத்துக்குள் வர்த்தக உடன்பாடு!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இவ்வருடத்துக்குள் வர்த்தக உடன்பாடு! – கொழும்புக்கு 2 பில்லியன் யுவான்களையும் வழங்குகின்றது பீஜிங் (photo)
இலங்கை, சீனா ஆகிய நாடுகளுக்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டினுள் கைச்சாத்திட எதிர்பார்ப்பதாக சீனப் பிரதமர் லீ கெகியான் தெரிவித்தார்.
இலங்கைப் பிரதமருக்கும், சீனப் பிரதமருக்குமிடையிலான சந்திப்பு பீஜிங் நகர சீன பொது மண்டபத்தில்   நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
போக்குவரத்து, நிதி, வணிகம் போன்ற துறைகளை அடிப்படையாகக்கொண்டு, ஆசியாவில் பொருளாதார மற்றும் போட்டிமிகு நிலைமைக்கு மாற்றமடையவும், அதன் ஊடாக இந்து சமுத்திரத்தின் கேந்திர நிலையமாக முன்னேற்றமடையவும் தேவையான ஒத்துழைப்பு மற்றும் உதவியை இலங்கைக்கு வழங்க சீனா தயாராகவுள்ளது என்றும் கூறினார்.
“அதற்குத் தேவையான முதலீட்டுச் சூழலை இலங்கையில் உருவாக்க வேண்டும். நிலைபேறான ஸ்திரத்தன்மை மற்றும் பலமான சட்டக் கட்டமைப்பு உருவாகுமாயின், உலகின் அதிகமான முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வார்கள்.
இலங்கையில் தொழில்களை ஆரம்பித்தல் மற்றும் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சீன நிறுவனங்கள் மற்றும் கம்பனிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.
தொன்மையான நட்புறவை அடிப்படையாகக் கொண்டு சீனா இலங்கைக்கு வழங்கும் உதவி தொடர்பாக நன்றிகளைத் தெரிவித்த இலங்கைப் பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க, அம்பாந்தோட்டை கைத்தொழிற் பேட்டை மற்றும் கொழும்பு நிதியியல் நகரம் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் நன்மைகள் தொடர்பான விடயங்களையும் கலந்துரையாடினார்.
விசேட கடமைப் பொறுப்புக்கள் அமைச்சர் சரத் அமுனுகம, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி கருணாசேன கொடிதுவக்கு, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அதாவுதஹெட்டி, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் கிழக்காசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் சாவித்திரி பானபொக்கே, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் மதாரா  சில்வா, பிரதம அமைச்சரின் விசேட உதவியாளர் சென்ட்ரா பெரேரா, சீனாவிலுள்ள இலங்கைத் தூதரக பணியாட் தொகுதி தலைமை அதிகாரி ஷானி கல்யாணரத்ன, அமைச்சு ஆலோசகர் (பாதுகாப்பு) பிரிகேடியர் திலக் வீரகோன், ஆலோசகர் (வணிக) ருவன்தி ஆரியரத்ன ஆகியோரும்  இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அதேவேளை, இந்த வருடம் இலங்கையின் அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கு வழங்கும் 400 மில்லியன் சீன யுவான் நிதி உதவிக்கு  மேலதிகமாக, 2018 – 2020 காலப்பகுதிக்கு 2 பில்லியன் சீன யுவான் நிதி உதவியை  வழங்க சீனா நடவடிக்கை மேற்கொள்ளும் என அந்நாட்டு ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்தார்.
இலங்கைப் பிதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்