விளையாட்டு கழகங்கள் விளையாட்டு, கலை, கலாசாரம், சமூகப் பணி, கல்விப் பணி என்பவற்றில் கால்பதித்து சமூகத்தின் மேம்பாட்டுக்காக அயராது உழைக்க வேண்டும்:எம்.இராஜேஸ்வரன்

விளையாட்டு கழகங்கள் வெறுமனே விளையாட்டோடு மட்டும் நின்று விடக்கூடாது. மாறாக விளையாட்டு, கலை, கலாசாரம், சமூகப் பணி, கல்விப் பணி என்பவற்றில் கால்பதித்து சமூகத்தின் மேம்பாட்டுக்காக அயராது உழைக்க வேண்டும். அப்போது தான் பல கோணங்களிலும் பாதிக்கப்பட்ட எமது சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். இவ்வாறான பணியை கல்முனை துளிர் விளையாட்டுக் கழகம் நீண்டகாலமாக முன்னெடுத்து வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாகும்.
இவ்வாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் குறிப்பிட்டார்.
கல்முனை துளிர் விளையாட்டுக் கழகம் விளையாட்டுக் கழக சீருடையினை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு கல்முனை வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இக்கழகத் தலைவர் ஏ.கிரிஷாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பிரதம அதிதியாகவும், கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் அதிபர் வ.பிரபாகரன், பிரதி அதிபர் செ.கலையரசன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
அங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் மேலும் பேசுகையில்,
விளையாட்டு என்பது உடலையும் உள்ளத்தையும் வளப்படுத்தும் கலையாகும். விளையாட்டுத் துறையில் ஈடுபடுபவர்கள் தானாகவே சமூக மேம்பாட்டுக்கான சேவைகளை செய்வது இயல்பாகும். இன்று எம்மத்தியில் வாழும் பலர் போதிய உடற்பயிற்சி இன்மையினால் தொற்றா நோய்களுக்கு ஆளாகி தமது உயிர்களை மாய்த்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் நோயாளிகளாக மாறியுள்ளனர். இவற்றிலிருந்து எமது சமூகத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் நாம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது அவசியமாகும்.
கல்முனை துளிர் விளையாட்டுக் கழகமானது கடந்த காலங்களில் சமூக நன்மை கருதிய பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவர்கள். தனிப்பட்ட வகையில் எனது அரசியல் பயணத்திற்கும் கைகொடுத்து உதவியவர்கள். இத்தகைய நல்ல நோக்கம் கொண்ட இவர்களின் பயணத்திற்கு என்றும் நான் துணையாக இருப்பேன் என்றார்.
இந்நிகழ்வில் துளிர் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் அதிபர் வ.பிரபாகரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரனுக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்