தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்கு பின்னரும் இயங்குவதாக குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்கு பின்னரும் இயங்குவதாக வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன் நேற்று நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.
இதன்காரணமாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்த அவர், கல்வி நிலையங்களுக்கு சில நேரக் கட்டுப்பாடுகளை முன்வைக்க வேண்டும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை வழங்கி மாணவர்களுக்கு ஒரு நாள் ஆவது வீட்டில் இருக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகியோர் அதனை வடமாகாண கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்த வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாணத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்கள் இயங்குவது தொடர்பில் ஏற்கனவே சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அந்த நடைமுறை இங்கு பின்பற்றப்படவில்லை என்கிறீர்கள். அதனால் அதனை மீள அனைத்து பிரதேச செயலகம் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கும் அனுப்பி நடைமுறைப்படுத்துமாறு தெரிவிக்கின்றோம். மீறும் தனியார் கல்வி நிலையங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார். இதனை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவும் ஏற்றுக் கொண்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்