புகையிரத திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே விபத்துக்களுக்கு காரணம் – அமைச்சர் சத்தியலிங்கம் குற்றச்சாட்டு 

 

இலங்கை புகையிர திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கைகளே அண்மைக்காலமாக புகையிரத விபத்துக்கள் நடைபெறுவதற்கு காரணமென வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் பத்மநாதன் சத்தியலிங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளார்.

வவுனியா புளியங்குளத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற புகையிர விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகிமை தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர். புகையிரத திணைக்களமானது பொறுப்பற்ற விதத்தில் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கு சிறந்த உதாரணம் ஓமந்தை விளாத்திக்குளம் புகையிரதக்கடவையை மூடியமை. ஓமந்தை நகரிலிருந்த பெரியவிளாத்திக்குளம் செல்லும் வீதி மிகவும் பழமையானது.

இலங்கையில் புகையிரத சேவை ஆரம்பிப்பதற்கு முன்பே மக்களால் பயன்படுத்தப்பட்ட  வீதியாகும். எனினும் 2012 ஆம் ஆண்டு புகையிரத வீதி வியஸ்த்தரிப்பின்போது பொதுமக்களுடன் கலந்தரையாடாமல் தன்னிச்சையாக வீதிக்கு குறுக்காக புகையிரத நிலைய மேடையை அமைத்து அப்பாதையை மூடியுள்ளனர். இதற்கு பதிலாக மாற்றுப்பாதையொன்று திறக்கப்பட்டுள்ளது. 50 மீற்றர் தூரம் கடவையை கடக்கவேண்டிய மக்கள் தற்போது இரண்டு கி.மீ தூரம் செல்லவேண்டியுள்ளது. இதற்கு அப்போதைய மாவட்ட நிர்வாகமும் பொறுப்புக்கூற வேண்டும்.

இதனால் அன்றாடம் பாடசாலை செல்லும் மாணவர்கள்இ நோயாளிகள் பெரிதும் சிரமப்படுகிறனர். சிலவேளைகளில் பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பற்ற விதத்தில் புகையிரத வீதியை கடக்க முற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2014ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு மாவட்ட ஒருங்கணைப்புக்குழு கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டாலும் புகையிரத பகுதி செவிசாய்ப்பதாக இல்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை சொல்லி தட்டிக்கழிக்கின்றார்கள். இதுதொடர்பில் 2015ம் ஆண்டு கிளிநொச்சிக்கு வருகை தந்த மத்திய புகையிர அமைச்சர்  அவர்களிடம் தெரிவித்திருந்தேன். அதேபோன்று இந்த வருட ஆரம்பத்தில் வவுனியா பேருந்து நிலைய திறப்புவிழாவுக்கு வருகை தந்த புகையிரத துறை அமைச்சரிடம் நினைவூட்டல் கடிதம் வழங்கியிருந்தேன். எனினும் எதுவுமே நடைபெறவில்லை..

இதே போன்றுதான் வவுனியாவில் காணப்படும் பல கடவைகள் முறையாக நிர்மாணிக்கப்படவில்லை. தண்டவாளம் தரைமட்டத்திற்கு மேலாக வெளிக்கிளம்பிய நிலையில் காணப்படுகின்றது. இதனால் பாதையை கடக்கும் வாகனங்கள் பாரிய சிரமத்தை எதிர்நோக்குகின்றன. குறிப்பாக பெண்கள் மோட்டார் சைக்கிள்களில் வீதியை கடக்கும்போது வாகனம் இயங்காது நின்று விடுகின்றது.

புதூர் புளியங்குளம் வீதி கடவை பாதுகாப்பற்றதாக காணப்படுகின்றது. இங்கு பாதுகாப்பு கடமையில் கடவைக்காப்பாளர் இல்லை. மின்சமிச்சை விளக்கு மட்டுமே காணப்படுகின்றது. கடந்த சில தினங்களாக இந்த சமிச்சை இயங்கவில்லை என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் ஊர்மக்களும் தெரிவிக்கின்றனர். இதனால் அநியாயமாக இரண்டு உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன.இதே நிலைதான் இறம்பைக்குளம் பாலமோட்டை வீதிக்கடவையிலும். எனவே இந்த விடயத்தில் புகையிரத திணைக்களம் கூடிய கவனமெடுத்து எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் பாரத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்