தமிழகத்தில் மக்களுக்கு விரோதமான ஆட்சி இடம்பெறுகின்றது: ஓ.பன்னீர்செல்வம்

தமிழகத்தில் மக்களுக்கு விரோதமான ஆட்சி இடம்பெற்று வருகின்றது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் செயல்வீர, வீராங்கனைகளின் ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்றிரவு (புதன்கிழமை) இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அங்கு  உரையாற்றும் போதே மேற்குறித்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மக்களுக்கான ஆட்சியை நடத்தினார்கள். ஆனால், இன்று ஆட்சியும், கட்சியும் சசிகலா குடும்பத்தின் கையில் காணப்படுகின்றது.

ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க வேண்டும் என்றும் அதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால், நீதிவிசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

கட்சியையும், ஆட்சியையும் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து விடுவிக்க அவர்கள் முன்வரவில்லை. தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆடசியானது, ஜெயலலிதாவின் கொள்கைகளை நிறைவேற்றும் ஆட்சியாக இல்லை.

சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தனித்தனியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சியே இடம்பெறுகின்றது. இதற்கிடையே மு.க.ஸ்டாலின் எப்படியும் முதலமைச்சராகி விடவேண்டும் என்று கனவு காண்கிறார். அவருடைய கனவு ஒருபோதும் பலிக்காது.

மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எனவே, எப்போது எந்த தேர்தல் வந்தாலும் நாங்களே பெற்றிப்பெறுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்