நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் மீண்டுமொரு விசேட நடவடிக்கைத் திட்டம் கல்முனையில் மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

(எஸ்.அஷ்ரப்கான்)
நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் மீண்டுமொரு விசேட நடவடிக்கைத் திட்டம்  மீண்டும்    அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு பூரண ஒத்துழைப்பை பிரதேச மக்கள் வழங்க வேண்டும் என  கல்முனை பிராந்திய தொற்றுநோய்
மற்றும் மலேரியா நோய்
தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என். ஆரிப் தெரிவித்தார்.
சுகாதார திணைக்களமும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவும் இணைந்து செயற்படுத்திய டெங்கு ஒழிப்பு விசேட நடவடிக்கையில் கலந்து கொண்டு உரையாற்றிய வைத்திய அதிகாரி டாக்டர் என். ஆரிப் தொடர்ந்தும் குறிப்பிடும் போது,
நாட்டின் பல பாகங்களையும் முன்னரை விடவும் கடந்த சில மாதங்களாக உலுக்கி வருகின்றதொரு நோயாக இன்று டெங்கு நோய் மாறியுள்ளது. இந்த வருடத்தில் இதுவரை இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணித்தவர்களின் எண்ணிக்கையானது கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகின்ற போது மிகவும் அதிகரித்த ஒரு நிலை காணப்படுகின்றது. இந்த நிலையானது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படவில்லையானால் எதிர்வரும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கால மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் நிலவுகின்றது.
எனவே தான், இந்த நிலையைத் தவிர்ப்பதற்காகவும், நிலைபேறான ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதற்காகவும் இலங்கை அரசாங்கமும், சுகாதாரத் திணைக்களமும் பலவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஒரு செயற்பாடாக அண்மையில் மார்ச்சு மாத இறுதிப்பகுதியிலும், ஏப்ரல் மாத ஆரம்பப்பகுதியிலும் நாட்டிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளினுள்ளே தெரிவு செய்யப்பட்ட கிராம சேவை அலுவலகர்கள் பிரிவுகளில் நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் தேசிய வாரம் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது. எனினும், டெங்கு நோயின் தாக்கத்தில் கணிசமானளவு குறைவு ஏற்படாததன் காரணமாக, சுகாதார திணைக்களமும், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவும் இணைந்து இம்மாதம் 18ஆம், 19ஆம் திகதிகளில் இன்னுமொரு விசேட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாகவுள்ள தெரிவு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட கிராம சேவை அலுவலர் பிரிவுகளில் நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. இந்த நடவடிக்கை ஒரு கூட்டு நடவடிக்கையாகவே இருக்கும்.
இந்நடவடிக்கையில் முப்படையினர், பொலிசார், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிராந்திய சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தொண்டர் நிறுவனங்களும் பங்கெடுப்பதோடு, உள்ளுராட்சி சபையினரும் உரிய பங்களிப்பை வழங்குவார்கள்.
இவை எல்லாவற்றையும் விட, டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் அதன் வெற்றிக்கு முக்கியமான பங்குதாரர்களாக இருக்கப்போகின்றவர்கள் பொதுமக்கள் தான். பொதுமக்களின் ஒத்துழைப்பின்றி இந்நோயைக் கட்டுப்படுத்துவதென்பது இயலாதவொரு விடயமாகும். ஏனெனில், டெங்கு நோயை உண்டாக்கும் நோய்க்கிருமிகளைக் காவிச்சொல்லுகின்ற ஈடிஸ் வகை நுளம்புகள் பல்கிப்பெருகி வளரக்கூடிய இடங்களை உருவாக்குகின்றவர்கள் பிரதானமாக பொதுமக்களே. இது பற்றிய பலவிதமான விழிப்புணர்வுகள் தொடராக வழங்கப்பட்டு வருகின்ற நிலையிலும் இன்னும் பொதுமக்களின் ஒத்துழைப்பு திருப்தியாக இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அவ்வாறான இடங்களை ஏற்படுத்தாமல் தவிர்ப்பதன் மூலமாகவே இந்த நோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகாணலாம்.
எனவே, ஒவ்வொரு பொதுமகனும் இந்த விடயத்தில் பரிபூரணமான அக்கறை எடுப்பதன் மூலமாக தன்னையும் தனது உறவுகளையும் இந்த கொடிய டெங்கு நோயிலிருந்து காத்துக்கொள்வதற்காக அதுதொடர்பில் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்