ஆறாத வடுக்களோடு தமிழின அழிப்பின் 08 ஆவது ஆண்டு நினைவலை அஞ்சலிகள் மன்னாரில் – மே 18.

நினைவில் அழிக்க முடியாத முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தால் மாந்தை மேற்கு பிரதேச செயலக பகுதியில் உள்ள அடம்பன் நெடுங்கண்டல் பிரதேசத்தில் மிகவும் உணர்வோடு 18-05-2017 வியாழன் காலை 10:30 மணியளவில் நினைவேந்தப்பட்டது.
நிகழ்விற்கு அடம்பன் பங்குத்தந்தை, மெதடிஸ்த திருச்சபையின் போதகர், இந்துக்குருக்கள், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாணசபையின் உறுப்பினர்களான வைத்தியக் கலாநிதி ஞா.குணசீலன், ஏ.எஸ்.பிரிமூஸ் சிறைவா ஆகியோரும், மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுவினர், தமது உறவுகளை யுத்தத்தில் இழந்த உறவினர்கள், அப்பகுதியைச் சேர்ந்த மூத்த பிரஜைகள், மன்னார் நகர முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகசபை உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக மலர்தூவி அஞ்சலி செய்தனர்.
நிகழ்வின் ஈகைச்சுடரை கடந்த யுத்தத்தில் தனது ஐந்து பிள்ளைகளை இழந்த தாயார் அவர்கள் ஏற்றிவைத்ததோடு நிகழ்வின் நினைவு சின்னத்திற்கு யுத்தத்தில் தனது மனைவியை இழந்த மூத்த உறுப்பினர் ஒருவர் மலர்மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலியை ஆரம்பித்தார், நிகழ்வுகளை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையேற்று நடத்தினார்.
அஞ்சலி உரைகளை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் ஆகியோர் நிகழ்த்தினர். அந்தவகையில் அமைச்சர் டெனிஸ்வரன் அங்கு உரையாற்றுகையில் நமது இனம் தலைநிமிர்ந்து வாழவேண்டும் என்ற கனவுகளோடு தமது இன்னுயிர்களை உவந்தளித்த சகல போராளிகளுக்கும் அதேவேளை அநியாயமாக இழக்கப்பட்ட சகல தமிழ் மக்களதும் ஆன்மா சாந்தியடைய தமது அஞ்சலிகளை செலுத்துவதாகவும், அதேவேளை ஒருசில விடயங்களை இங்கு சுட்டிக்காட்டவேண்டிய தேவை உள்ளதாகவும் அந்தவகையில் இன்றய இந்த நிகழ்வை நாம் பார்க்கும்போது இழந்துபோன மக்களாகிய நாம் இழந்த இழப்புக்களை மறந்துவிட்டோமா என்ற ஓர் வினாவை தொடுப்பதாக அமைகின்றது, காரணம் இது எட்டாவது நினைவேந்தல் ஆண்டு ஆகவே ஏற்பாட்டுக்குழு, இந்த மாந்தை மேற்கு பிரதேச மக்கள் யுத்தத்தில் மிகுதியான பாதிப்புக்களை சந்தித்தவர்கள் அத்தோடு முள்ளிவாய்க்கால் வரை சென்று பல உறவுகளை இழந்தவர்கள் ஆகவே இந்த பிரதேசத்தில் இந்த ஆண்டு நடத்துவதே சாலச்சிறந்தது என்று தீர்மானித்து அதனடிப்படையில் இந்த இடம் தீர்மானிக்கப்பட்டு அஞ்சலிநிகழ்வுகள் இங்கு ஒழுங்குசெய்யப்பட்டு தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, ஆனால் இங்கு வந்திருக்கும் உறவுகளின் எண்ணிக்கை மிகவும் கணிசமானதாகவே காணப்படுகின்றது ஆகவே தான் நாங்கள் இவ்வாறான ஒரு கேள்வியை கேட்கவேண்டிய சந்தர்ப்பம் இன்று அமைந்துள்ளது. ஆனால் என்னை பொறுத்தமட்டில் ஆயிரம் பேரை திரட்டி நடத்துவதை விடவும் உணர்வோடு ஒரு குறுகிய சமூகமாக நாம் இணைந்து நடாத்துவது சாலச்சிறந்தது என்று கருதுகிறேன் ஆகவே இவ் அஞ்சலிநிகழ்வில் உணர்வோடு கலந்துகொண்டு இழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்திய அனைத்து சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்