மன்னார் மாவட்டச் செயலக 4 மாடிக்கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைப்பு

புதிதாக நிர்மானிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4 மாடிக்கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வைபவ ரீதியாக திறந்து வைப்பு-(photos)
 
காணாமல் போனவர்களது உறவினர்கள் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம்.
 
-மன்னார் நிருபர்-
 
(19-05-2-17)
மன்னாரில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4  மாடிக்கட்டிடத்தொகுதியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைத்து மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் நிதி உதவியுடன் சுமார் 305 மில்லியன் ரூபாய் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட மன்னார் மாவட்டச் செயலக 4  மாடிக்கட்டிடத்தொகுதி திறப்பு விழா நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இடம் பெற்றது.
இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து அமைச்சர்களான  வஜீர அபேவர்த்தன,றிஸாட் பதியுதீன்,ரி.எம்.சுவாமிநாதன், சாகல ரத்னாயக்க, பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன்,கே.கே.மஸ்தான், மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து குறித்த மாவட்டச் செயலகத்தின் புதிய 4 மாடிக்கட்டிடத்தொகுதியை வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து புதிய மாவட்டச் செயலக கட்டிடத்தொகுதிக்குச் சென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு பணிகளை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்டச் செயலக மைதானத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,காணி உறுதிப்பத்திரங்களும் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
-இதே வேளை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க புதிய மாவட்டச் செயலக கட்டிடத்தொகுதியை திறந்துவைக்கவுள்ளார் என்ற செய்தியை அறிந்த மன்னார் மாவட்டத்தில் உள்ள காணாமல் போனவர்களது உறவினர்கள்  மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல்  பதாதைகளை ஏந்திய கறுப்பு கொடிகளை கைகளில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-எனினும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் திறப்பு விழாவிற்கு முன் கதவினால் மாவட்டச் செயலகத்திற்குள் சென்ற போதும்,நிகழ்வு முடிவடைந்த நிலையில் பின் கதவினால் வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்