எமது வீரர்கள் மடியவில்லை ,புதைக்கப்படவில்லை அவர்கள் விதைக்கப்பட்டிருக்கின்றார்கள்: பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன்

துறையூர் தாஸன்

எமது மக்கள் வீரர்கள் மடியவில்லை அவர்கள் புதைக்கப்படவில்லை அவர்கள் விதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற சிந்தனையின் அடிப்படையிலேயே அவர்களின் தியாகம் எங்கும் என்றும் எடுத்துச் செல்லப்படும்.இந்த நாள் என்றும் எங்களை விட்டு மறக்காத முடியாத ஒரு சரித்திர நாளாக இருக்கும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் தெரிவித்தார்.
ஜேர்மன் நம்பிக்கை ஒளி அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் அம்பாறை மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான கி.ஜெயசிறிலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற, முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவுகூறும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், எந்த நோக்கத்தை கொண்டு எதை அடைய வேண்டுமென்று தியாக மனப்பான்மையுடனும் இலக்குடனும் போராடினார்களோ, அதனை நொறுக்கி ஒடுக்குகின்ற ஒரு செயற்பாட்டை சர்வதேசம் முன்னெடுத்து புதைகுழிக்குள்ளே பூட்டப்பட்ட ஒரு நாளாகத்தான் இந்நாள் காணப்படுகின்றது.
இந்த நாளிலே உயிர் நீத்த ஒவ்வொரு தமிழ் இனத்தின் ஒவ்வொரு தலைமகனும் தலைமகளும் இந்த நாளை நாங்கள் நினைவுகூற வேண்டிய நாளாக இருக்கின்றது.இந்த நாள் தமிழர்களுக்கு ஏற்பட்ட மிகப் பயங்கரமான ஒரு மனித உரிமை மீறலான நாளாக இருக்கிறது.உலகத்திலே இடம்பெற்ற மிகப்பெரிய மனித உரிமை மீறல் இந்த நாளிலே எமது தமிழ் மக்களுக்காக நடத்தப்பட்டு இருக்கிறது.
சர்வதேசங்கள் பார்த்திருக்கின்ற வேளையிலேயே பல வல்லரசுகளின் செயற்பாடுகளால் , எமது தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட முறையிலே சதிகார சக்திக்குள் அகப்பட்டு, எமது தமிழ் மக்கள் மடிந்திருக்கிறார்கள்.இந்த நாளை தமிழ் மக்கள் என்றும் மறக்கப் போவதில்லை.இந்த நாள் இப்போதல்ல எத்தனை தலைமுறை சென்றாலும் இந்த நாள் எங்களை விட்டு அகலாத நாங்கள் நினைவு கூறுகின்ற கண்ணீர் மல்கி அனுஸ்டிக்க வேண்டிய ஒரு நாளாக இந்நாள் காணப்படுகின்றது என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்