அரசியல் தீர்வு கோரி கொழும்பில் 23ஆம் திகதி அறவழிப் போராட்டம்!

அரசியல் தீர்வு கோரி கொழும்பில் 23ஆம் திகதி அறவழிப் போராட்டம்! – காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்கவும் வலியுறுத்து
அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு,  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குமாறு அரசை வலியுறுத்தி எதிர்வரும் 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் அறவழிப் போராட்டமொன்று நடைபெறவுள்ளது.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் மாலை 3 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடைபெறும் இந்த அமைதிப் போராட்டத்துக்குத் தெற்கிலுள்ள சிவில் அமைப்புகளும் ஆதரவை வழங்கியுள்ளன.
எனவே, வடக்கு, கிழக்கிலுள்ள சிவில் அமைப்பினரும், காணாமல்போனவர்கள், தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டு அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்று குறித்த அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவித்தார்.
“போர் முடிவடைந்து  8 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத்   தீர்வு  காணப்படவில்லை.  அரசியல் தீர்வு முயற்சி இழுத்தடிப்பில் உள்ளது. அடிப்படை விடயங்களான காணிப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ளது. அரசியல் கைதிகளும் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். காணாமல்போனவர்கள் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படவில்லை. இவற்றைச் செய்யுமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது” என்றும் அவர் மேலும் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்