கண்ணகி வழக்குரையும் வி.சீ.கந்தையாவும்..

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மண்டூரில் வினாசித்தம்பி சின்னாத்தை தம்பதிகளுக்கு 1920.07.29 இல் பிறந்தவரான வி.சீ.கந்தையா புலமையினால் பண்டிதர்,புலவர்,எழுத்தாளர் என்று பலராலும் அறியப்பட்டவர்.கந்தையா,தன் இளமைக் காலத்தில் வ.பத்தக்குட்டி உபாத்தியாயரிடமும் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையிடமும் விபுலானந்தரின் குருவாகிய குஞ்சித்தம்பி உபாத்தியாயரிடமும் கல்வி பயின்றவராவார்.
பிற்காலத்தில் யாழ்ப்பாணத்து ஆரிய பாசா அபிவிருத்திச் சங்கப் பண்டிதர் பட்டமும்(1943) இமதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் பட்டமும் (1944)இ இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தழிழ் வித்துவான் பட்டமும்(1952)இ அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பி.ஓ.எல்(டீ.ழு.டு) பட்டமும் பெற்றவராவார்.கண்ணகி வழக்குரை மற்றும் மட்டக்களப்புத் தமிழகம் ஆகிய நூல்களுக்கு பதிப்பாசிரியராக பண்டிதர் வி.சீ.கந்தையா பணியாற்றியது இவ்விரு Áல்களுக்கு தனிச்சிறப்பை அளிப்பதுடன் அவரது தகைமைக்குச் சான்றாகவும் அமைகின்றது.
மட்டக்களப்புத் தமிழகம் என்ற Áலைப் படைத்து இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றவரும் பழைய ஏட்டுருவிலே கிடந்த ‘கண்ணகி வழக்குரை’ என்ற நூலை அச்சிற் பதிப்பித்த பெருமையும் வித்துவான் பண்டிதர் வி.சீ.கந்தையா அவர்களையே சாரும்.
கடல் சூல் இலங்கை கயவாகு பத்தினி வழபாட்டை கொண்டு சென்றான் என்று இளங்கோவடிகள் பாடியதற்கேற்ப தமிழரும் சிங்களவரும் பத்தினி தெய்வத்தை அன்று தொட்டு இன்று வரை வழிபட்டு வருகின்றனர்.ஆதியிலே கண்ணகியின் கதையை திருவிழாக் காலங்களில் பொது மக்கள் பாட்டாக கேட்டு வந்ததுடன் வாய்மொழிக்காப்பியமாகவும் இது வளர்ந்துள்ளதென்று தமிழ்ப்பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் நூலின் சிறப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஓலைச் சுவடிகளாய் கண்ணகி கோயில்கள் தோறும் உள்ள பெட்டகங்களிலே பன்னெடுங்காலமாக பொது மக்களின் கைகளை இலகுவில் அடையாதவாறு கிடந்த பழைய ஓலைச் சுவடிகள் பலவற்றை பரிசோதித்து பாடபேதம்,அடிக்குறிப்பு என்பவற்றுடன் கண்ணகி வழக்குரையை அச்சேற்றி வெளிக்கொணர காலத்துக்கு காலம் பலர் முயன்றும் காரைதீவு அபிவிருத்திச் சங்கத்தினரின் இரண்டாவது வெளியீட்டு(1968) முயற்சியும் வித்துவான்,பண்டித வி.சீ.கந்தையாவின் தமிழ்ப் புலமையும் இந்து சமயம் மற்றும் இந்து கலாசார ஆராய்ச்சி வன்மையுமே கண்ணகி வழக்குரை நூல் வெளிவருவதற்கு பெரிதும் உதவியது.
காரைதீவு கண்ணகையம்மன் ஆலய வண்ணக்கர்களான பொ.செல்லத்துரை,கே.சரவணமுத்து,வே.தம்பிராசா,வ.கயிலாயபிள்ளை கப்புகனார்,க.குலேசேகரம் வண்ணக்கர்,கண்ணகி வழக்குரை பதிப்பாசிரியர் வி.சீ.கந்தையா ஆகியோர்களே கண்ணகி வழக்குரை ஏட்டுப் பிரதிகளின் ஆராய்ச்சிக்கு செயற்பட்டவர்களாக விளங்குகின்றனர்.
கண்ணகை வழக்குரையில் வரம்பெறு காதையில் கோவலனார் பிறந்த கதையும் அம்மன் பிறந்த கதையும் கப்பல் வைத்த காதையினுள் மீகாமன்,துரியோட்டு,கப்பல் வைத்தல் கதையும் கடலோட்டுக் காதையில் வெடியரசன் போர்,நீலகேசி புலம்பலும் வீர நாரணன் கதையும் மணிவாங்கிய கதையும் மற்றும் விளங்கு தேவன் போரும் உள்ளடக்கப்பட கல்யாணக் காதை,மாதவி அரங்கேற்று காதை போன்றனவும் பொன்னுக்கு மறிப்பு காதையில் பொன்னுக்கு மறிப்பு கதையும் இரங்கிய காதலும் வழிநடைக் காதையில் வயந்த மாலை தூது,வழிநடையும் அடைக்கலக் காதை,கொலைக்களக் காதையில் சிலம்பு கூறல்,கொலைக் களக் கதை,அம்மன் கனாக் கண்ட கதையும் உயிர் மீட்பு கதையும் வழக்குரைத்த கதையும் குளிர்ச்சிக் காதையில் குளிர்ச்சியும் வழக்குரைக் காவியமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
கலைத்தொண்டுக்காக வாழும் பண்டிதர் வி.சீ.கந்தையாவின் சேவைகள் மட்டக்களப்பின் பெருமையையும் முக்கியத்துவத்தினையும் உலகறியச் செய்திருக்கின்றன என்று, பேராசிரியர் சு.வித்தியானந்தன் அனுவுருத்திர நாடக மதிப்புரையில் கூறுகின்றார் என்பதையும் மனங்கொள்ள வேண்டும்.
பாக்கியராஜா மோகனதாஸ் (நுண்கலைமாணி)
துறைநீலாவணை

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்