பிரெக்சிற் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படும்: தெரேசா மே

ஜனநாயக ஒன்றியக் கட்சியுடனான பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமாக அமைந்திருந்த நிலையில், பிரெக்சிற் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படும் என பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சவேற்றிவ் கட்சி பெரும்பான்மையை இழந்த நிலையில், ஜனநாயக ஒன்றியக் கட்சியின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பது தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றது. மேற்படி சந்திப்பு குறித்து பரிஸில் கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.

பிரெக்சிற் பேச்சுவார்த்தைக்கு முன்னர் பலமான ஆட்சியை நிரூபிக்கும் வகையில் பிரதமர் தெரேசா மே முன்கூட்டிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அதன்படி, கடந்த வாரம் பிரித்தானிய பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தலில் இரு பிரதான கட்சிகளும் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியது.

318 தொகுதிகளில் வெற்றிபெற்ற தெரேசா மே தலைமையிலான கொன்சவேற்றிவ் கட்சி, எட்டு ஆசனங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியது. அதன்படி, பத்து தொகுதிகளில் வெற்றிபெற்ற ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க எலிசபெத் மகாராணியிடம் கோரிக்கை விடுத்தார். அதற்கு மகாராணியும் ஒப்புதல் அளித்திருந்தார்.

அந்தவகையில், ஜனநாயக ஒன்றியக் கட்சியின் ஆதரவை உறுதிப்படுத்தி உடன்பாடொன்றை எட்டும் வகையில் நேற்றைய சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்