கைக்குழந்தையுடன் பயணம் செய்யும் போது கவனிக்க வேண்டியவைகள்

குடும்பமாக வெகேஷன் செல்ல பிளான் போடும்போது, அந்த வீட்டில் கைக்குழந்தை இருந்தால், திட்டம் தள்ளிவைக்கப்படும். அல்லது, குழந்தையுடன் சேர்த்து தாயும் அந்த லிஸ்டிலிருந்து நீக்கப்படுவார்கள். காரணம், குழந்தையுடன் சென்றால் ட்ரிப் சரியாக அமையாது; குழந்தையின் கம்ஃபர்ட் குறைந்துவிடும் என்ற அச்சம். உண்மையில் அது அவ்வளவு கடினமான காரியமே அல்ல. சில முன்னேற்பாடுகளைச் செய்தால், கைக்குழந்தையுடன் வெகேஷனை என்ஜாய் செய்யலாம். அதற்கான சில டிப்ஸ்…

1. வெகேஷன் ட்ரிப்பை கடைசி நிமிடத்தில் திட்டமிடாமல், ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுங்கள். எங்கே செல்லப் போகிறோம்? எப்போது செல்லப்போகிறோம் என்று முடிவுசெய்து, டூர் செல்லும் இடங்களில் தங்குவதற்கான அறைகளை புக் செய்யுங்கள். ரயில் மற்றும் பேருந்துகளை முன்பதிவு செய்யுங்கள். குழந்தைக்கு ஏற்ற வகையில் முன்வரிசை இருக்கைகளாக இருக்கட்டும். காரில் செல்வதாக இருந்தால், செல்லும் வழியில் எங்கெல்லாம் குழந்தைக்கான பால் மற்றும் உணவை வாங்குவது என்று முன்கூட்டியே திட்டமிடுங்கள்.

2. டிராவல் செய்வதால் ஏற்படும் பருவ மாற்றங்கள் மற்றும் சூழல் மாற்றங்களினாலும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படலாம். உதாரணமாக, சாப்பிடும் நேரம் மாறுபடும். முன்கூட்டியோ அல்லது தாமதமாகவோ பசி எடுக்கும். அதேபோல தூங்கும் நேரமும் மாறலாம். இவற்றை உணர்ந்து குழந்தையைக் கவனியுங்கள். உணவைத் திணிக்காமல் சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படுங்கள்.

3. எப்போதும் பொம்மைகள் குழந்தைகளின் விருப்பம். குழந்தைகளைச் சமாளிக்க அவை பெரிதும் உதவும். எனவே, செல்லும் இடங்களில் புதிதாகப் பொம்மை வாங்குவதைவிட வீட்டில் குழந்தை விளையாடு பழக்கப்பட்ட பொம்மைகளை எடுத்துசெல்வது நல்லது.

4. எப்போதும் இரண்டு செட் டிரஸ் கூடுதலாக இருப்பது அவசியம். ஏனெனில், சூழ்நிலையைப் பொருத்து ஆடையை அடிக்கடி மாற்ற வேண்டியதிருக்கும். இரவு ஆடைகள், லைட் வெயிட் ஆடைகளைக் கூடுதலாக எடுத்துக்கொள்வது சிறப்பு.

5. டூர் செல்லும் இடத்தைக் குழந்தையின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு முடிவுசெய்ய வேண்டும். ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்கள் குழந்தையின் உடலில் உடனடியாக மாற்றஹ்ட்தை ஏற்படுத்திவிடலாம். அதனால், குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தேவையான மருந்துகளை எடுத்துச் செல்லவும்.

6. கைக்குழந்தையுடன் பயணம் செய்யும்போது, லக்கேஜ் அதிகமாக இருப்பது இயல்பு. எனவே, கூடுதலாகப் பைகள் வைத்திருப்பது எமர்ஜென்ஸி நேரங்களில் உதவும். குழந்தைக்குத் தேவையான பொருள்களைத் தனியாக பேக்கிங் செய்வதன் மூலம் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கலாம்.

7. புதிய இடத்தில் குழந்தைகள் இயல்பைவிட அதிகமாகக் கண் விழித்துச் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிக்கும். இதனால், தூங்கும் நேரம் குறைந்து விரைவிலேயே சோர்ந்துவிடலாம். குழந்தையின் தூங்கும் நேரத்துக்கு ஏற்ப திட்டமிட்டு வெளியே செல்லுங்கள். சரியான நேரத்தில் அறைக்குத் திரும்பி தூங்கவையுங்கள்.

8. எந்த டூராக இருந்தாலும் செக் லிஸ்ட் மிகவும் அவசியமானது. பரபரப்பில் முக்கியமான பொருள்களை தவறவிடுவது இயல்பு. இதைத் தவிர்க்க, செக்லிஸ்ட் ஒன்றை தயாரியுங்கள். ஒவ்வோர் இடத்தைவிட்டுக் கிளம்பும் முன்பு அந்த லிஸ்ட்டைப் பார்த்து குழந்தைகளுக்குத் தேவையானவை (டையபர், ஃபீடிங் பாட்டில், டிஷ்யூ…) உள்ளனவா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தை வளர்ப்பில் ஒவ்வொன்றிலும் பெற்றோர் மிகக் கவனமாக இருக்க வேண்டும். குழந்தையுடன் உற்சாகமாகப் பயணத்தை அனுபவிக்க வாழ்த்துகள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்