மேற்கு லண்டன் தீ விபத்து 12 பேர் உயிரிழப்பு, பலர் வைத்தியசாலையில்

லண்டன் தொடர்மாடிக் குடியிருப்பு தீ விபத்தில் 12 பேர் உயிரிழப்பு லண்டன் தொடர் மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 65 இற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறும் 50 இற்கும் அதிகமானவர்கள் தவிர மீதமுள்ளவர்களில் எத்தனை பேர் தப்பித்தனர், எத்தனைபேர் அங்கு சிக்கியிருக்கலாம் அல்லது பலியாகியிருக்கக்கூடும் என்கிற விபரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இதுபோன்ற நிலையிலுள்ள ஏனைய தொடர்மாடிக் குடியிருப்புக்களில் சோதனை நடத்தப்படும் என பொலிஸார் மற்றும் தீயணைப்புத்துறை அமைச்சர் நிக் ஹர்ட் தெரிவித்துள்ளார். முன்னதாக, மேற்கு லண்டனில் தொடர் மாடிக் குடியிருப்பு கட்டடத்தில் தீப் பிடித்து, மக்கள் தங்கள் வீடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாக அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர். லண்டனில் புதன்கிழமை (14) அதிகாலையில் பெரிதாக பரவிய இந்தத் தீயை அணைக்க சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்களை வெளியேற்றுவதற்கான வேலைகள் நடந்துவருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பிடித்த நேரத்தில், நூற்றுக்கணக்கானோர் அந்தக் கட்டடத்தில் இருந்ததாகவும், பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் நம்பப்படுகிறது. தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்